×

பெங்களூரு தமிழ்ச்சங்க புதிய நிர்வாகிகள் கர்நாடக மாநில தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும்: தமிழ் ஆர்வலர்கள் ஆலோசனை

பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் சங்கத்தின் நலனுக்காக மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலனுக்காகவும் சேவை செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  பெங்களூரு மாநகரில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, கடந்த இரண்டாண்டுகளாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அதிகாரியின் மேற்பார்வையில் இயங்கி வந்தது. மாநகரில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்தும், சங்கம் தமிழர்களின் நிர்வாகத்தில் கீழ் இயங்காமல் அரசாங்கத்தின் கீழ் இயங்கியது. தமிழர்களின் நெஞ்சங்களில் முள் குத்தியதுபோல் இருந்தது.

 அந்த முள் நீங்கும் வகையில் கடந்த மாதம் 28ம் தேதி சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டது. இதில் மூன்று அணிகள் போட்டியிட்டனர். சங்க உறுப்பினர்களின் வாக்குரிமையால் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைசெயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த எளிமையான விழாவில் பொறுப்பேற்றனர். அதன் மூலம் அரசாங்கத்தின் பிடியில் இருந்து சங்கம் மீண்டுள்ளது. புதிய நிர்வாகிகள் செயல்பட தமிழ் ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

து.சண்முகவேலன் (முன்னாள் தமிழ்ச்சங்க தலைவர்)
நமது சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். தலைமை பொறுப்பேற்கும் தங்கள், சங்கத்தின் விதிகளை பேணிகாத்து, சங்கத்தின் ஒழுக்கத்தையும் காத்து செயல்பட வேண்டும் என்று இந்த சமயத்தில் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ‘‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்பு’’ என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்க தங்கள் தலைமையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சங்க விதிமுறைகளை பேணிக்காத்து அதை நடைமுறைப்படுத்தினால், சங்கத்தின் மாண்பு காப்பாற்றப்படும். சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை நியமன செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். சங்க பள்ளிக்கு தாளாளரை நியமிப்பதில் தக்காரை நியமிக்க வேண்டும், சங்கத்தின் மீது அக்கறை கொண்டவர்களை நியமிக்க வேண்டும், சங்கத்திற்கு தன்னலம் கருதாமல் உழைத்தவர்கள், உணர்வுள்ள முன்னோடிகளை அரவணைத்து செயல்பட வேண்டும்.

கி.சி.தென்னவன் (உலகதமிழ் கழக தலைவர்)
 நமது முன்னோடிகள் க.சுப்ரமணியனார், தண்கி.வெங்கடாச்சலனார் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டு பேணி காத்து வந்த பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு 2021-23ம் பருவத்திற்கான புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். பெங்களூரு வாழ் தமிழர்களின் பாதுகாப்பு கேடயமாக மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கர்நாடக வாழ் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக பெங்களூரு தமிழ்ச்சங்கம் விளங்குகிறது. சங்கத்திற்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும்போது, நிர்வாகம் பிடிப்பதற்காக அணிகள் அமைத்து ேபாட்டியிடுவது வழக்கமான நடைமுறை, தேர்தல் களத்தில் இருக்கும்போது மட்டுமே போட்டியாளர்கள். தேர்தல் முடிந்து நிர்வாகிகள் பொறுப்பேற்றபின், அனைவரும் சங்கத்தின் ஓர் அங்கம். தங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை கலைந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் நின்று சங்கத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும். கருத்து மோதலுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.

ந.இராமசாமி (மாநில திமுக அமைப்பாளர்)
 தமிழ்ச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாநில கழகத்தின் சார்பில் வாழ்த்துகள். இரண்டாண்டுகளுக்கு பின் நமது சங்கத்தை நாமே நிர்வாகம் செய்யும் வாய்ப்பு தேர்தல் மூலம் கிடைத்துள்ளது. கடந்த இரண்டாண்டுகள் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள், போட்டி மனப்பான்மைகள், யார் பெரியவர் என்று நமக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளால் நாம் அனுபவித்த அவமதிப்பு, கஷ்டங்கள் இனி அகன்று போக வேண்டும். சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள தங்கள், அரசாங்கத்துடனும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்துடன் நல்ல தொடர்பு ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மூலம் சிறுபான்மை மொழியினருக்கு கிடைக்கும் சலுகைகளை பெற்று தர வேண்டும். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இயங்கி வரும் அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசின் மூலம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நமது சங்கம் இனி எந்த காலத்திலும் அரசாங்கத்தின் பிடியில் சிக்காமல் தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.

வி.செந்தில்குமார் (தலைவர் தமிழ் குடும்பங்கள்)
 பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பல ஆயிரம் பூர்வீக தமிழர்கள் உள்ளனர். இந்த மண்ணில் பிறந்து, இதே மண்ணில் தங்களை அர்ப்பணித்து கொள்ளும் வகையில் வாழும் தமிழர்கள் எந்தவிதமான நிர்வாக பதவிகளுக்கும் வராமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு சங்கத்தில் உறுப்பினராக்கி பொறுப்புகள் வழங்க வேண்டும். வியாபார நோக்கத்தில் வந்து, சங்கத்தில் இணைந்து பொறுப்பேற்று பின் அவர்களின் சொந்த ஊருக்கு செல்பவர்களால் சங்கத்தின் வளர்ச்சிக்கு தமிழர்களுக்கும் பலன் கிடைக்காது.பெங்களூரு மாநகராட்சிக்கு நடக்கும் தேர்தலில் சங்கத்தின் மேற்பார்வையில் தமிழர்களை களத்தில் நிறுத்தி அவர்கள் வெற்றி பெறுவதற்கான கால சூழலை புதிய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். சங்கத்தின் சார்பில் ஆண்டுவிழா, பொங்கல் விழா, திருவள்ளுவர் தினம் கொண்டாடுவது மட்டும் செயல்பாடாக இல்லாமல், மாநிலம் முழுவதும் வாழும் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் கருத்து வேறுபாடு கொண்டு மீண்டும் அரசாங்கத்தின் வசம் சங்கத்தை ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தக்கூடாது.

Tags : Bangalore Tamil Sangam ,Tamils ,Karnataka , Bangalore, Tamil Sangam new executive, Karnataka, Tamil activists consult
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்