×

அம்பேத்கர் ஜெயந்தி விழாவை தடை இல்லாமல் கொண்டாட வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: மாநில அரசுக்கு கோரிக்கை

பெங்களூரு: அம்பேத்கர் ஜெயந்தி விழாவை எந்த தடைகளும் இல்லாமல் கொண்டாட மாநில அரசு வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசியல் அமைப்பு சட்ட உரிமை பாதுகாப்பு ஒற்றுமை அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஞானபிரகாஷ் சுவாமிஜி, எம். வெங்கடசாமி ஆகியோர் கூறியதாவது: மீண்டும் 2ம் கட்ட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு அனைத்து துறைகளுக்கும் சில புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அரசின் உத்தரவின்படி மாநிலத்தில் எந்த கட்டுப்பாடும் கடைப்பிடிக்கவில்லை. அரசு நிகழ்ச்சிகள், மாநாடுகள், கோயில் விழாக்கள் உட்பட அனைத்தும் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

அரசின் இந்த புதிய அறிவிப்பால் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராகவுள்ளது. இதனால் அம்பேத்கர் ஜெயந்தியை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் கொரோனா வழிகாட்டுதலின்படி கொண்டாட மாநில அரசு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  அம்பேத்கர் ஜெயந்தி விழாவை கொண்டாடக்கூடாது என்ற நோக்கத்தில் பெங்களூருவில் 20-ம் தேதி வரை 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தை நாட்டுக்கு கொடுத்த அம்பேத்கர் ஜெயந்தியை மாநிலத்தில் அனைத்து பகுதியிலும் கொண்டாட மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் அம்பேத்கர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்திற்கு எந்த தடையும், நெருக்கடியும் யாரும் கொடுக்ககூடாது. இதற்கான உத்தரவை மாநில அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்றனர்.


Tags : Ambedkar Jayanti festival , Ambedkar Jayanti Festival, State Government, Request
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...