×

அம்பானி, அதானி வரிசையில் 140 பேர் அதிக பணக்காரர்கள் நாடுகளில் 3வது இடத்தை பிடித்தது இந்தியா: போர்ப்ஸ் இதழ் வெளியீடு

நியூயார்க்: ஏழை நாடு என கூறப்படும் இந்தியா உலக பணக்காரர்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு 3வது இடத்தை பிடித்துள்ளது. போர்ப்ஸ் இதழ் தனது 35வது உலக பணக்காரர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், உலகின் நம்பர்-1 பணக்காரராக தொடர்ந்து 4வது ஆண்டாக அமேசான் சிஇஓ மற்றும் நிறுவனர் ஜெப் பெசோஸ் இடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.12.9 லட்சம் கோடி. அமேசான் பங்குகள் அதிகரித்ததால், கடந்த ஆண்டை விட ரூ.4.5 லட்சம் கோடி சொத்து அதிகரித்துள்ளது. 2வது இடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் ரூ.11 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பு ரூ.9.2 லட்சம் கோடி என ராக்கெட் வேகத்தில் எகிறி உள்ளது.

இதை விட இப்பட்டியலில் உள்ள சுவாரஸ்யமான விஷயம், இந்திய தொழிலதிபர்களைப் பற்றியதுதான். டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6.16 லட்சம் கோடி. இதன் மூலம், சீனாவின் ஜாக் மாவையே முந்தியுள்ளார். ஆசியாவின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தியாவின் 2வது பணக்காரராக கவுதம் அதானி உள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் 24வது இடத்தில் உள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.3.68 லட்சம் கோடி. எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் சிவ் நாடார் ரூ.1.71 லட்சம் கோடியுடன் 3வது இடத்திலும், உலகளவில் 71வது இடத்திலும் உள்ளார்.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன தலைவரான சைரஸ் பூனவாலா இந்தியாவின் 7வது பணக்காரராகவும், உலகின் 169வது பணக்காரராகவும் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.92 ஆயிரம் கோடி. உலகிலேயே அதிகமான பணக்காரர்களை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 724 பணக்காரர்கள் உள்ளனர். 2வது இடத்தில் சீனா 698 பணக்காரர்களுடன் உள்ளது. அடுத்த இடத்தில் இந்தியா 140 பணக்காரர்களுடன் உள்ளது. கடந்த ஆண்டு 102 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 140 ஆக அதிகரித்துள்ளது.

* 3 பேரின் சொத்து 100 கோடி டாலர்
அம்பானி, அதானி, சிவ்நாடார் ஆகிய முதல் 3 இடத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.7.3 லட்சம் கோடியாகும். கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 5 மடங்கு உயர்ந்துள்ளது.

* டாப்-10ல் யார் யார்?
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி, சிவ் நாடாரை தவிர, டிமார்ட் நிறுவனர் ராதாகிஷண் தமனி, கோடாக் மகேந்திரா வங்கி சிஇஓ உதய் கோடாக், லட்சுமி மிட்டல், ஆதித்ய பிர்லா குரூப் சேர்மன் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல் நிறுவனர் திலில் சங்வி, பார்தி என்டர்பிரைசஸ் சேர்மன் சுனில் மிட்டல் ஆகியோர் உள்ளனர்.

Tags : India ,Ambani ,Adani , India ranks 3rd among Ambani, Adani 140 richest countries: Forbes Magazine
× RELATED அம்பானி இல்ல திருமண விழாவில் திருட முயன்ற திருச்சி கும்பல் கைது