×

4 மாவட்டங்களில் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு? சென்னை பெருநகரத்தில் 59.06 சதவீதம் வாக்குபதிவு

* திருவள்ளூர் மாவட்டத்தில் 70% பதிவு
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 68.18% பதிவு
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.98% பதிவு

சென்னை: சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளில் 59.06 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவது என்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 70 சதவீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.98 சதவீதம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவிக நகர், அண்ணாநகர் உட்பட 16 சட்டமன்ற தொகுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பொன்னேரி, அம்பத்தூர், திருத்தணி உட்பட 10 சட்டமன்ற தொகுதிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்பதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், சோழிங்கநல்லூர் பல்லாவரம், தாம்பரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. காலை முதலேயே சென்னை மாநகரப்பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி கிடந்தன. இதனால், வாக்களிக்க வந்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் வாக்களித்து விட்டு செல்லும் நிலை தான் பல இடங்களில் இருந்தது. இந்த நிலைமை மாலை 7 மணி வரை இருந்தது. ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நகரப்பகுதிகளை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் மக்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக சென்று வாக்களித்தனர். இதனால், காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் கூட்டம் இருந்தது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமாக 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்துக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் 77.93 சதவீதம், பொன்னேரியில் 77.36 சதவீதம், திருத்தணி 79 சதவீதம், திருவள்ளூரில் 75 சதவீதம், பூந்தமல்லியில் 68 சதவீதம், ஆவடி 68 சதவீதம், அம்பத்தூரில் 61.9 சதவீதம், மாதவரத்தில் 66.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் சென்னை மாவட்டத்தில் மொத்தம்  59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், திருவொற்றியூர் 65 சதவீதம், ஆர்.கே.நகர் 66.57 சதவீதம், பெரம்பூர் 62.63 சதவீதம், கொளத்தூர் 60.52 சதவீதம், வில்லிவாக்கம் 55.52 சதவீதம், திருவிக நகரில் 60.61 சதவீதம், எழும்பூர் 59.29 சதவீதம், ராயபுரம் 62.31 சதவீதம், துறைமுகம் 59.7 சதவீதம், சேப்பாக்கம் 58.41 சதவீதம், ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீதம், அண்ணா நகர் 57.02 சதவீதம், விருகம்பாக்கம் 58.23 சதவீதம், சைதாப்பேட்டை 57.26 சதவீதம், தி.நகர் 55.92 சதவீதம், மயிலாப்பூர் 56.59 சதவீதம், வேளச்சேரி 55.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 60.9 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது, கடந்த 2016யை காட்டிலும் குறைவு தான். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர் 57.86 சதவீதம், பல்லாவரம் 60.8 சதவீதம், தாம்பரம் 59.3 சதவீதம், மதுராந்தகம், 80.91 சதவீதம், திருப்போரூர் 76.74, செய்யூர் 78.16 சதவீதம், செங்கல்பட்டு 63.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 71.98 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில், ஸ்ரீபெரும்புதூரில்  74.03 சதவீதம், ஆலந்தூர் 60.85 சதவீதம், உத்திரமேரூர் 80.09 சதவீதம், காஞ்சிபுரம் 72.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , What is the percentage of registered votes in 4 districts by constituency? 59.06 per cent turnout in Chennai metropolis
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...