ரயில்வே பாதுகாப்பு படையில் 1,180 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: டிஐஜி சந்தோஷ்சந்திரன் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வேயிலும், ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். இதுவரை தெற்கு ரயில்வேயில் 70 சதவீத பாதுகாப்புப்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி சந்தோஷ் சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்புப் படையில் ஆரம்பத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பலர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். இன்றைய தேதியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தெற்கு ரயில்வே முழுவதும், 70 சதவீதம் பாதுகாப்புப்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள். பொதுமக்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதேபோல், சென்னை ரயில்வே கோட்டத்தில் 1,450 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர். இதில் 1,180 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என ரயில்வே கோட்ட மூத்த பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் தெரிவித்தார்.

Related Stories:

>