×

சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த 1.72 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: சார்ஜா, துபாயிலிருந்து திருவனந்தபுரம், லக்னோ வந்த 2 சர்வதேச விமானங்களில் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை எடுத்து சாக்ஸில் மறைத்து சென்னை வந்த 2 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. உள்நாட்டு விமான பயணிகளிடம் சுங்கச் சோதனை கிடையாது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக சுங்க அதிகாரிகள் இந்த விமான பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கேரளாவை சேர்ந்த முகமது அநாஸ் (28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவரது கால்களில் அணிந்திருந்த ஷு சாக்ஸ்க்குள் மறைத்து வைத்திருந்த 1.28 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகளை விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு கடத்தல் ஆசாமி திருவனந்தபுரத்தில் இறங்கிவிட்டார். அதே கடத்தல் கும்பலை சேர்ந்த மற்றொரு நபர், திருவனந்தபுரத்திலிருந்து இந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக டிக்கெட் எடுத்து ஏறி வந்துள்ளார். விமானம் நடுவானில் பறந்தபோது ஏற்கனவே சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டிகளை எடுத்து தனது கால் ஷு சாக்ஸ்களில் மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்தார்.

லக்னோவிலிருந்து நேற்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்த மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டனர். சென்னையை சேர்ந்த நைனார் முகமது (30) என்ற பயணியை சோதனையிட்டபோது அவருடைய ஷு சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த 446 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இரு உள்நாட்டு பயணிகளிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.72 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

* கடத்தல் பின்னணியில் கருப்பு ஆடுகள்
சர்வதேச விமானம் உள்நாட்டு விமானமாக மாற்றப்படுவது விமான நிலைய அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். ஒரு விமானத்தில் குறிப்பிட்ட சீட்டுக்கடியில் வைக்கப்படும் தங்கத்தை எடுக்க வேண்டும் என்றால், அதே எண் சீட்டை விமானத்தில் பதிவு செய்ய வேண்டும். நிச்சயமாக விமான நிலைய ஊழியர்கள் உதவி இல்லாமல்  சீட்டை புக் பண்ண முடியாது. ஒரு பக்கம் கடத்தல் ஆசாமிகள் கடத்தலுக்கு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு விமான நிலைய வட்டாரங்களும் உதவுவதாக சுங்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Sharjah, Dubai , Seizure of 1.72 kg gold smuggled from Sharjah, Dubai: 2 arrested
× RELATED துபாய், ஷார்ஜாவில் இருந்து...