பொதுவுடமை கட்சி தலைவர் வே.ஆனைமுத்து உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

தாம்பரம்: தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து(96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவர். இந்நிலையில், நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனையில் ஆனைமுத்து உயிரிழந்தார். இதனையடுத்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக தாம்பரம், இரும்புலியூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த வே.ஆனைமுத்து உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நேற்று திராவிட கழக தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி, அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா உட்பட பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து,  பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், மறைந்த ஆனைமுத்து உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக, ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>