கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு: ஆர்பிஎப் போலீசார் மீட்டு பயணியிடம் ஒப்படைப்பு

சென்னை: கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் பயணி தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு, ஆர்பிஎப் போலீசார் மீட்டு தவறவிட்ட பயணியிடம் ஒப்படைத்தனர். சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, விருநகர் போன்ற பகுதிகளுக்கு 20க்கும் மேற்ப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மறுமார்க்கமாக மதுரை, திருச்சி, தாம்பரம், சென்னை எழும்பூருக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (02634) சிறப்பு ரயிலில் நாகர்கோவில் இருந்து தாம்பரத்திற்கு மதிகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் எஸ்-3 பெட்டியில் தாம்பரத்திற்கு வந்தார்.

அப்போது ரயில் காலை 5.30 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதையடுத்து ரயிலில் வந்தவர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கியுள்ளனர். பிறகு ரயில் புறப்பட்டு சென்ற பிறகு தாங்கள் கொண்டு வந்த பொருட்கள் மற்றும் பேக்குகளை சோதனை செய்தனர். அப்போது, தங்க நகைகள் வைத்திருந்த பையை ரயிலில் வைத்து விட்டு இறங்கியுள்ளது தெரியவந்தது. பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர்கள் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசாரிடம் கூறினர்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயிலை சோதனை செய்தபோது அதில் பயணி தவறிவிட்ட பேக் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த பேக்கை எடுத்து சோதனை செய்தபோது அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு பேக்கை தவறவிட்ட பயணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அடையாளங்களை கூறி தாங்கள் தவறவிட்ட பேக்குகளை வாங்கி சென்றனர். மேலும் நகையை மீட்டு கொடுத்த ஆர்பிஎப் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். 

Related Stories:

>