×

2016, 2019ம் ஆண்டு தேர்தல்களுடன் ஒப்பிடும் போது தமிழகம் உட்பட 5 மாநிலத்திலும் வாக்குப்பதிவு சரிவு: வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா?

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 475 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குபதிவானது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே பதிவாகி உள்ளது. இதற்கு, வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிப்பு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்குவங்கத்தில் 3ம் கட்ட தேர்தல் நேற்று முடிந்த நிலையில் வரும் 29ம் தேதி வரை இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. நேற்று மட்டும் 5 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 475 தொகுதிகளில் 1,53,538 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்தனர். தேர்தல் ஆணையத் தரவுப்படி, மேற்குவங்கத்தில் (31) 77.6 சதவீதம், அசாமில் (40) 82 சதவீதம், தமிழ்நாடு (234) 71.7 சதவீதம், கேரளா (140) 74 சதவீதம், புதுச்சேரி (30) 81.5 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளன.

கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளின் வாக்குப்பதிவு நடைபெற்றதால், 1,000 வாக்குகளுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற நிலையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதனால், புதிய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஏற்கனவே வாக்குப்பதிவு செய்ய செல்லும் வாக்குச்சாவடிக்கு பதிலாக வேறொரு வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய கட்டாயம் பல வாக்காளர்களுக்கு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு வாக்குச்சாவடிக்கு சென்று (வெவ்வேறு இடத்தில் உள்ள பள்ளிகள்) வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், பலர் வாக்களிக்க செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் நேற்று நடந்த 5 மாநில வாக்குப்பதிவில் தெரியவருகிறது. மேற்குவங்கத்தில் 2016ல் 85.2 சதவீதமாகவும், 2019ல் 82.6 சதவீதமாகவும், 2021ல் 77.6 சதவீதம் பதிவாகி உள்ளது.

அதேபோல், அசாமில் 2016ல் 86.9, 2019ல் 84.9, 2021ல் 82 சதவீதம், தமிழகத்தில் 2016ல் 74.8, 2019ல் 72.5, 2021ல் 71.7 சதவீதம், கேரளாவில் 2016ல் 77.1, 2019ல் 77.8, 2021ல் 74 சதவீதம், புதுச்சேரியில் 2016ல் 84 சதவீதமாகவும், 2019ல் 82 சதவீதமாகவும், 2021ல் 81.5 சதவீதமாகவும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கப்பதிவானது சரிவை நோக்கிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 26 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறும் எட்டு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியது. சௌயிங்கீ, என்டாலி, பெலியாகட்டா, ஜோராசன்கோ, ஷியாம்புகூர், காசிபூர்-பெல்காச்சியா, கொல்கத்தா துறைமுகம் மற்றும் போவானிபூர் எட்டு தொகுதி அதிகாரிகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் பணியாற்றுவதால் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், மாநில அதனை செய்யாததால் அவர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : TN , Voter decline in 5 states, including Tamil Nadu, compared to the 2016 and 2019 elections: Is it due to the increase in the number of polling booths?
× RELATED திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம்