×

தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல, அது ஒரு கூட்டுக் கனவு..! மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று 72.78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று ஆழ்வார்பேட்டையிலுள்ள வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார். அதன்பிறகு உடனடியாக விமானம் மூலம் கோவைக்குச் சென்று தான் போட்டியிடும் தெற்கு தொகுதி வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்டார்.

தேர்தல் முடிந்த அடுத்த நாளே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுடன் இணையும் படப்பிடிப்பிற்கான பணிகளை துவங்கிவிட்டார். இந்நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் என்ற இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பதே கிடையாது. என்னைப் பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களைக் கற்று முன்னகர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக் கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil ,Nadu ,Kamal Haasan , Restructuring Tamil Nadu is not just an election slogan, it is a collective dream ..! There is no end to the work of the people: Kamal Haasan statement
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...