×

தூத்துக்குடியில் பட்டா வழங்காததால் பொதுமக்கள் திரண்டு சமையல் செய்து போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் மாலையில் வாக்களிப்பு

தூத்துக்குடி  : வீடுகளுக்கு 20 வருடமாக பட்டா வழங்க மறுத்துவருவதை கண்டித்து தூத்துக்குடி ராஜீவ்நகர் பகுதி பொதுமக்கள் நேற்று தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வாக்களித்தனர்.  
 தூத்துக்குடி ராஜீவ்நகர் 1-வது தெரு முதல் 10-வது தெரு வரையிலும் பாக்கியலெட்சுமி நகர் பகுதியிலும் சுமார் 250 வீடுகள் உள்ளன.

இங்குள்ள பொதுமக்கள் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பத்திரப்பதிவு செய்து அந்த இடங்களில் வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக மீளவிட்டான் பஞ்சாயத்திலும் அதன் பின்னர் 2010 முதல் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாநநகராட்சியிலும் வீட்டுத் தீர்வை, மின்கட்டணம், தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகின்றனர். மேலும், இடங்களும் முறையாக திட்ட அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால், இந்த இடங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது எனக்கூறி பட்டா வழங்காமல் கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பிற்கு பின்னரும்  பட்டா வழங்க மறுத்து வருகின்றனர் என்றும் இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறியும் அங்குள்ள குடியிருப்பினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

 தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தினர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கோர்ட் உத்தரவை அதிகாரிகள் மீறியதை கண்டித்தும், தங்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உடனடியாக தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராஜீவ்நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர்  மற்றும் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பகுதியில் மொத்தம் 1,340 வாக்காளர்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் யாரும் வாக்களிக்காமல் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒன்று திரண்டு அமர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த போராட்டத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மாலை வரை நீடித்தது.

 இதையடுத்து மாலை 4 மணியளவில் தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜ் ஆகியோர அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் 9-ம் தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, தடையில்லா சான்று வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜ் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், மாலை 4.20  மணிக்கு மேல் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வாக்களிக்க சென்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Thoothukudi ,Patta , Thoothukudi: The people of Thoothukudi Rajivnagar area boycotted the election yesterday condemning the refusal to issue leases for houses for 20 years.
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...