×

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,783 வாக்குச்சாவடிகளில் 72.51 சதவீதம் வாக்குப்பதிவு-கடந்த தேர்தலை விட 2.90 சதவீதம் குறைவு

வேலூர் :வேலூர் மாவட்டத்தில் 1,783 வாக்குச்சாவடிகளில் 72.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலை விட 2.90 சதவீதம் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளது.தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1,783 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காட்பாடி தொகுதியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 311, குடியாத்தம்(தனி) தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, தொங்குமலை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு, அத்தியூர் உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள 12 வாக்குச்சாவடிகளுக்கான பிரத்யேக மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் 2,569 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,116 கட்டுப்பாட்டு கருவிகள், 2,244 விவிபேட் கருவிகள் 5 தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் 1,765 வாக்குச்சாவடிகளில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அரசியல் கட்சியினர் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது.

அதைதொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை 6 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கிராமப்புறங்கள், நகர்புறங்கள் என்று அனைத்து பகுதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர்.

இதற்கிடையில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன் குடும்பத்துடன் சென்று வேலூர் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் குடும்பத்துடன் சென்று லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் த.வேலழகன் ஒடுக்கத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.குடியாத்தம் தொகுதி கள்ளூர் அரசு நடுநிலைப்பள்ளியில் திமுக வேட்பாளர் அமலு வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் பரிதா பேர்ணாம்பட்டு ஜேஜே நகர் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளர் சீத்தராமன் தனது வாக்கினை அம்மானங்குப்பம் உயர்நிலைப்பள்ளியில் செலுத்தினார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெகன்மூர்த்திக்கு சென்னை பூந்தமல்லியில் வாக்கு உள்ளதால், இங்கு அவர் வாக்களிக்கவில்லை.காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு, குடியாத்தம் காந்திநகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். கலெக்டர் சண்முகசுந்தரம் தனது வாக்கினை வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

மாலை 6 மணிக்கு மேல் கொரோனா பாதித்தவர்கள் உரிய பாதுகாப்புடன் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது வாக்குச்சவாடி அலுவலர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இரவு 8 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரங்கள்: காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 71.03 சதவீதமும், வேலூர் தொகுதியில் 69.14 சதவீதமும், அணைக்கட்டு தொகுதியில் 71 சதவீதமும், கே.வி.குப்பத்தில் 76.46 சதவீதமும், குடியாத்தத்தில் 71.94 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது. 5 சட்டமன்ற தொகுதியும் சேர்த்து 72.51 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை விட 2.90 சதவீதம் குறைவான வாக்குப்பதிவாகும்.

அழைத்துச்செல்ல தன்னார்வலர்கள் இல்லை: வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூதாட்டி ஒருவர் வாக்களிக்க வந்தார். அப்போது, சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்ல தன்னார்வலர்கள் இல்லை. இதனால் மூதாட்டியுடன் வந்த மற்றொருவர், மூதாட்டியை சக்கர நாற்காலியில் அமர வைத்து வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து சென்றார்.

அப்போது, மைதானம் குண்டும், குழியாக இருந்தால், சக்கர நாற்காலியை தள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டார். பின்னர் சிறிது தூரம் மூதாட்டி நடந்து சென்று வாக்களித்தார். பின்னர், மீண்டும் மூதாட்டியுடன் வந்தவரே கடும் சிரமப்பட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே அழைத்துச்சென்றார்.

புதிய வாக்காளர்கள் ஆர்வம்:

18 வயது பூர்த்தியடைந்த இளம் தலைமுறை ஆண், பெண் வாக்காளர்கள் முதல்முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதனால் ஆர்வத்துடன் காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பின்னர் மை விரலை உயர்த்தி காட்டி செல்பி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தபால் வாக்கு விவரங்கள்

வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 10,362 பேரில் இதுவரை 4,940 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 1,525 பேரில் 963 பேர் வாக்களித்துள்ளனர். ராணுவ வீரர்கள் 1,733 பேரில் இதுவரை 62 பேர் வாக்களித்துள்ளனர். விடுபட்டவர்களுக்கு பதிவு அஞ்சல் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வரும் மே 2ம் தேதி காலை 7.59 மணிக்குள் தபால் மூலம் வாக்குகளை அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல், ஒரே சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் 1,772 அலுவலர்கள் தேர்தல் பணிச்சான்று அளிக்கப்பட்டு அவர்களது வாக்குச்சாவடியிலே தங்களது வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கு தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரியிலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
எனவே இந்த மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கண்காணிப்பு கேமரா வசதியுடன் 24 மணிநேரமும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா உபகரணங்கள் அகற்ற 149 குழுக்கள்

1,783 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கவும், சானிடைசர் வழங்கவும் 3,566 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.காய்ச்சல் அதிகம் இருப்பவர்கள் மாலை 6 மணிக்குப் பிறகு வந்து தனியாக வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சேகரிக்கப்பட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அகற்ற 149 குழுக்கள் மற்றும் பிரத்யேக வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெயிலுக்கு முன்பே குவிந்தனர்

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக 110.1 டிகிரி வரை பதிவாகியுள்ளது. இதனால் காலை முதலே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வெயிலுக்கு முன்பாகவே சென்று வாக்குகளை பதிவு செய்தனர்.

கலெக்டர் கண்காணிப்பு

வேலூர் மாவட்டத்தில் 197 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் பிரச்னைக்குரிய 1,131 வாக்குச்சாவடிகளில் அடையாளம் காணப்பட்டு இங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவை கண்காணித்தனர். நேற்று காலை கலெக்டர் சண்முகசுந்தரம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தப்படியே கண்காணிப்பு கேமரா பதிவுகளை கண்காணித்து ஆய்வு மேற்கொண்டார்.

பாதுகாப்பு பணியில் 2,700 பேர்

மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 7 கம்பெனி துணை ராணுவப்படையினர், 470 சிறப்பு காவல் படையினர், 733 காவலர்கள், காவல் அல்லாத 1,050 பேர் என்று மொத்தம் 2,749 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Vellore , Vellore: In Vellore district, 72.51 per cent votes were cast in 1,783 polling stations. 2.90 percent more than in the last election
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...