சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு-வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்

மதுரை : மதுரை சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்காளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவும், வாக்குப்பதிவு உயர்த்தவும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் இளம் வாக்காளர்கள் அதிகம் பேர் வாக்காளித்தனர்.

மதுரை வடக்குத் தொகுதிக்குட்பட்ட அல்-அமீன் பள்ளியில் வாக்களித்த இன்ஜினியரிங் 3ம் ஆண்டு மாணவி ஜனனி கூறும்போது, ‘‘வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிக்க விழிப்புணர்வு நடத்தினர். அதனை கண்டு புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்று முதன் முறையில் வாக்கு அளித்து இருக்கிறேன். புதிய தலைமுறையாக ஜனநாயகத்தை காக்க வாக்களித்து இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. நான் சிறு வயதில் இருந்தே வரிசையில் நின்று வாக்காளிக்க வேண்டும் என ஆசை. அது தற்போது நிறைவேறி உள்ளது’’  என்றார்.

திருமங்கலம் தொகுதியை சேர்ந்த ருத்ராகினி கூறும்போது, ‘‘கல்லூரியில் படித்து வரும் நான் இந்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 3 மாதத்திற்கு முன் வாக்காளர் அடையாள அட்டை வேண்டி தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பம் அளித்து இருந்தேன். அதுவும் குறித்த நேரத்தில் கிடைத்தது. அதனை வைத்து முதன் முறையாக நான் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

மதுரை கிழக்குத் தொகுதி வரிச்சூர் கருப்புகல் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் கூறும்போது, ‘‘நான் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, மேல் படிப்பு படிக்க முடியாததால் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். தற்போது 18 வயது முடிந்து விட்டது. முதன் முறையாக வாக்களித்து இருக்கிறேன். கிராமத்தில் உறவினர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

மதுரை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்த ஜன்ஸ் ஜேனிட்டா கூறும்போது, ‘‘மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறேன். எனது முதல் வாக்கு இது. கொரோனா காலத்தில் வாக்களிக்க பயமாக இருந்தது. பாதுகாப்பு வசதிகள் இருப்பதாக தெரிவித்ததால், இங்கு வந்து எனது கடமையை நிறைவேற்றியுள்ளேன்’’ என்றார்.

Related Stories:

>