×

செக் மோசடி வழக்கில் சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஒரு ஆண்டு சிறை : சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் இது என்ன மாயம். இந்த படம் தயாரிப்புக்காக  ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.

இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் அளித்திருந்தனர். இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர்  உள்ள சொத்துக்களை அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் உத்திரவாதத்தை மீறி பாம்பு சட்டை படத்தை வெளிவிட்டுள்ளதால் தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை  கோடி ரூபாயை  வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பணத்தை திரும்பத்தர உத்தரவிட்டது. இதையடுத்து ராடின்ஸ் நிறுவனத்திற்கு 7 காசோலைகளை சரத்குமாரும், ராதிகாவும் கொடுத்தனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது. இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் 7  கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்,  சைதாப்பேட்டை 3 -வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Sarathkumar ,Radhika ,Chennai Special Court , Actress Radhika, actor Sarathkumar
× RELATED அதிமுகவால் சிங்கிள் டீ கூட வாங்கித்தர முடியாது: ராதிகா பங்கம்