×

தேர்தல் வெற்றிக்கு சபரிமலை ஐயப்பன் துணை நிற்பார்!: கடவுள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதற்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்..!!

திருவனந்தபுரம்: தேர்தல் வெற்றி குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதாக கூறிய கருத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேரள சட்டப்பேரவைக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தனது வாக்குகளை பதிவு செய்தனர். பினராயில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் பினராயி விஜயன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார். மேலும் தனது அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிய அவர், நல்லவர்களுக்கு இறைவன் ஆதரவு அளிப்பார். இந்தத் தேர்தலில் மக்களின் பலம் நிரூபிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் நடந்தது போல தற்போதும் எங்கள் மீதான அனைத்து போலி குற்றச்சாட்டுகளும் மக்களால் நிராகரிக்கப்படும். மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் அந்த உணர்ச்சியை நாங்கள் கண்டோம். வரலாற்று ரீதியான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள். தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரி இயக்கத்தில் இருக்கும் முதலமைச்சர், இந்துக்களின் வாக்குக்காக இப்படி பேசலாமா என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Tags : Sabarimaya Iaipan ,First Minister ,Pinarai Vijayan , Election victory, Sabarimala Iyappan, Chief Minister Binarayi Vijayan
× RELATED ஏற்காடு பஸ் விபத்து:...