×

போலீசும், ராணுவமும் எங்களது எதிரிகள் அல்ல.. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் : மாவோயிஸ்ட்கள் அறிக்கை

ராய்ப்பூர் : காவல் துறையினரும் , பாதுகாப்புப் படையினரும் தங்களது எதிரிகள் அல்ல என்று மாவோயிஸ்ட்கள் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களுக்கு உட்பட்ட பஸ்தார் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள ஜாகர்குண்டா – ஜோனகுடா பகுதியில் மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவர் மாத்வி ஹித்மா, மற்றொரு தலைவர் சுஜாதா இருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களின் 6 முகாம்களில் இருந்து 2,000 வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையின் ஒரு குழுவை சுமார் 400 நக்சலைட்கள் 3 பகுதிகளில் இருந்தும் திடீரென சுற்றி வளைத்தனர். இரு தரப்பிலும் கடும் சண்டை மூண்டது. பாதுகாப்பு படையினர் தங்கள் அனைத்து வலிமையையும் பயன்படுத்தி போரிட்டனர். எனினும் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒரு வீரரை காணவில்லை. அவர் மாவோயிஸ்ட்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மாவோயிஸ்ட்கள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சுக்மா அருகே பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் 24 வீரர்கள் இறந்தனர். 31 பேர் காயம் அடைந்தனர்.ஒருவர் எங்களது கஸ்டடியில் உள்ளார். நாங்கள் சிறைப்பிடித்துள்ள ஒரு வீரரை விடுவிக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும். காவல் துறையினரும் , பாதுகாப்புப் படையினரும் தங்களது எதிரிகள் அல்ல.பாதுகாப்புப் படையினருடன் சண்டையில் தங்களது தரப்பில் 4 பேர் இறந்துள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சத்தீஸ்கர் மாநில பிஜாப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கணேஷ் மிஸ்ரா கூறுகையில், ஒரு ஜவான் அவர்களது காவலில் இருப்பதாக மாவோயிஸ்ட்களிடமிருந்து எனக்கு இரண்டு போன் அழைப்புகள் வந்தன. ஜவானுக்கு புல்லட் காயம் ஏற்பட்டது என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். மேலும் அவர் 2 நாட்களில் விடுவிக்கப்படுவார் என்றும் ஜவானின் வீடியோ மற்றும் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்றும்  அவர்கள் கூறினர், என்றார்.


Tags : Federal Government ,Maoists , மாவோயிஸ்ட்கள்
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...