×

சொந்த ஊரில் வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்து சென்னையில் இருந்து கடந்த 5 நாட்களில் அரசு பஸ்சில் 5.59 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக அரசு பஸ்களில் கடந்த 5 நாளில் 5.59 லட்சம் பேர் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் (5ம் தேதி) வரையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையிலிருந்து மட்டும் இல்லாமல் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் சேர்த்து இயக்கப்பட்டன. மேலும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் எம்டிசி பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 1ம் தேதி முதல் பலரும் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணித்தனர். கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி இரவு 12 மணி வரையில் 5.59 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு  பேருந்துகளின் இயக்கம் ஏப்ரல் 1ம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அதன்படி கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி இரவு 12 மணி வரையில் மொத்தமாக 13,853 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் மொத்தமாக 5,59,920 பேர் பயணித்துள்ளனர். மேலும் 62,071 பேர் முன்பதிவு செய்துள்ளனர்’ என்றனர்.

சென்னை, பெங்களூரு திரும்ப ஏற்பாடு
வாக்களிப்பதற்காக சென்றவர்கள் மீண்டும் தாங்கள் பணி செய்யும் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு சட்டமன்ற தேர்தல் முடிந்து திரும்பி வருவோருக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. அதன்படி பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் சிறப்பு பஸ் சேவை இருக்கும். தினசரி இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

Tags : Chennai , 5.59 lakh people travel by government bus from Chennai in last 5 days: Transport Department
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...