சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு விடுமுறை வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

சென்னை: தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்ததை முன்னிட்டு, அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிப்பதோடு, தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  இதையடுத்து, சென்னையில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் மளிகை கடைகள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், மின்சாதன விற்பனை நிலையங்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாக்களிக்க சென்றனர். மேலும், விடுமுறை என்பதால் சென்னை நகரில் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படவில்லை. வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. பெரும்பாலான முக்கிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் வீதிகளிலும், சாலைகளிலும், மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தே காணப்பட்டது. முக்கிய சாலைகளில் கூட வாகனங்கள் பெரிய அளவில் செல்லாமல் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னையில் பிரதான வணிக மையமாக திகழும் தி.நகர், புரசைவாக்கம், அண்ணாநகர், பாரிமுனை, பெரம்பூர், திருவான்மியூர், அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, கோடம்பாக்கம், சாலிகிராமம், எழும்பூர், நீலாங்கரை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.  இதனால் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. மேலும் பேருந்துகளும் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன. பொது வேலைநிறுத்தம் நடந்தால் சென்னை எப்படி இருக்குமோ அதுபோன்று நேற்று நகரின் பெரும்பாலான பகுதிகள் காணப்பட்டன. ஒரு சில சிறு கடைகள் மட்டுமே திறந்திருந்தது.

Related Stories:

>