தேர்தல் நடந்த ஒரு மணி நேரத்தில் ‘திடீர்’ பல்டி: விரைவில் அதிமுகவை கைப்பற்றுவேன் மீண்டும் பழைய பல்லவி பாடும் டிடிவி: அமமுகவை கலைக்க திட்டமா?

சென்னை: புதுக்கட்சியான அமமுக தொடங்கி, தேர்தலில் போட்டியிடுவதால் அதிமுகவுக்கும் எனக்கும் எந்த ெதாடர்பும் இல்லை என்று தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன், அதிமுகவை கைப்பற்றுவேன் என்று மீண்டும் பழைய பல்லவியை பாடி வருகிறார் டிடிவி தினகரன்.  அமமுக பொதுச் செயலாளரும், கோவில்பட்டி வேட்பாளருமான டிடிவி தினகரன் நேற்று மதியம் 12 மணி அளவில் அடையார் வெங்கடேஸ்வரா நகர் 5வது  தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தனது மனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

அதன் பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘தேர்தல் ஆணையம் வாக்கு பதிவுக்கான   ஏற்பாடுகளை சரியாக செய்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் இடங்களில் ஜாமர் கருவி பொருத்த  வேண்டும். இந்த தேர்தலுக்குப் பின்னரும், நாங்கள் அதிமுகவை மீட்டெடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.  

இந்தத் தேர்தலில் பெரிய அளவு மாற்றத்தை தமிழக மக்கள் உருவாக்குவார்கள். அமமுகவிற்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. கோவில்பட்டி தொகுதியில் நான் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.      சில இடங்களில் அதிமுகவினர் தோல்வி பயத்தில், எங்கள் கட்சி வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்கியது தெரியவருகிறது. மேலும், ஆளுங்கட்சியினர் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தால் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டனர்.’’ என கூறினார்.

Related Stories: