×

சோழிங்கநல்லூர் தொகுதியில் சிறுவர்கள் மூலம் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார்: திமுகவினர் போராட்டம்

துரைப்பாக்கம்: சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பாகம் என் 332ல்  திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுகவினர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாக்களிப்பதற்காக வரிசையில் 15 வயதுக்கு  உட்பட்ட சிறுவர்கள்  நிற்பதை பார்த்து, அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டனர். அப்போது அச்சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து, வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுகவினர் அந்த இடத்தில் வாக்கு பதிவை அனுமதிக்கக் கூடாது. வாக்காளர் அடையாள அட்டை காண்பித்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என கூறினர். ஆனால், வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

இதனைக் கண்டித்து, இவர்கள் அங்கு 3 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னரும், தேர்தல் ஆணையம் சார்பில், யாரும் அங்கு வரவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தமிழச்சி தங்கபாண்டியன் அங்கிருந்த நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்று திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் எப்படியாவது கள்ள ஓட்டு போட்டு  வெற்றி பெற வேண்டும் என்று பேசியது குறித்து, ஆடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் வாக்குப்பதிவு நடக்கும் பாகம் எண் 332 நேற்று ஆய்வு மேற்கொண்டபோது சிறுவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். இது குறித்து விசாரித்தபோது, அங்கிருந்து சிறுவர்கள் தப்பி ஓடினர். குறிப்பாக பாகம் எண் 332 ஒரே மாதத்தில் கூடுதலாக 1,500 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்தும் மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையருக்கு வேட்பாளர் ஏற்கனவே எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளார். மேலும், 2 மணி அளவில் எல்லா பகுதிகளிலும் 25 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த பூத்தில் மட்டும் 45%வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இது மிகப்பெரிய குற்றம்.

இதனை அடுத்து, இந்த பூத்தில் வாக்கு பதிவை நிறுத்த வேண்டும் என நாங்கள் கூறினோம். தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் 3 மணி நேரமாகியும் இங்கு வரவில்லை. இந்த அரசாங்கம் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு துணை போகிறது. அரசு அதிகாரிகள் அவர்களுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். தமிழக மக்கள் இதை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாட உள்ளோம்’’ என்றார்.

Tags : AIADMK ,Cholinganallur ,DMK , Complaint of AIADMK fraudulent driving by children in Cholinganallur constituency: DMK protest
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...