×

விவிபேட் கருவி செயல்படாததால் தகராறு தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்: வாக்குப்பதிவு 1 மணி நேரம் நிறுத்தம்

பெரம்பூர்: வாக்குபதிவு இயந்திரத்தில் பெண் ஒருவர் வாக்களித்தபோது, அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற விவரம் விவிபேட் கருவியில் தெரியாததால் தகராறில்  ஈடுபட்டார். இதனால், ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின் மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு தேர்தல் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அதிரடியாக அங்கிருந்து மாற்றப்பட்டார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46வது வார்டுக்குட்பட்ட வியாசர்பாடி 2வது பள்ளத்தெரு அனந்தநாயகி தொடக்கப்பள்ளியில அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி 285 (ஏ) வாக்குப் பதிவு மையத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  சுமார் 2 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாக்களிக்க அந்த மையத்திற்கு வந்தார். தனது ஆவணங்களை காட்டி வாக்களிக்கச் சென்ற அவர், தான் தேர்ந்தெடுத்த சின்னத்திற்கு நேராக பட்டனை அழுத்தினார். ஆனால் தான் எந்த சின்னத்திற்கு வாக்களித்தோம்  என காட்டும்  விவிபேட் கருவியில் அந்த பெண் வாக்களித்த சின்னம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

 அதற்கு அவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி பார்த்து  நீங்கள் போட்ட ஓட்டு பதிவாகி விட்டது எனக் கூறி உள்ளார்.  அதற்கு அந்த பெண் நான் ஓட்டு போடவில்லை என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பெரம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபாலனுக்கு தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற அவர், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அதற்குள், அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஒன்று சேர்ந்து  அந்த மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா அங்கிருந்தவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட இழுபறிக்குப் பின் வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு அந்த மையத்தில் இருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாற்றப்பட்டார். அதன்பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குவாதத்தில் ஈடுபட்ட  அந்த பெண்ணுக்கு மீண்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை இதனால் குறிப்பிட்ட அந்த வாக்கு மையத்தில் மட்டும்  2 மணி நேரம் பரபரப்பு நிலவியது

Tags : Dispute Election Officer Action Change due to Vivipad Tool Not Working: Voting Stopped for 1 Hour
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து...