×

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த ரவிச்சந்திர ஹாசன், நேற்று மதியம் வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு, ஒட்டு போட தனது ஆவணங்களுடன் வந்தார். நீண்ட வரிசையில் நின்று பின்னர், அங்கிருந்த தேர்தல் அலுவலரிடம், தனது ஆவணங்களை காட்டினார்.
அப்போது, அந்த தேர்தல் அலுவலர், ‘‘முன்னதாகவே நீங்கள் ஒட்டு போட்டிங்களா’’ என கேட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திர ஹாசன் ‘‘நான் இப்பதான் ஒட்டு போட வருகிறேன்’’ எனக்கூறி வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.  அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண், இப்போதுதான், ‘‘உங்கள் ஓட்டை ஒருத்தர் போட்டுவிட்டு போகிறார்’’ என்றார். இதை கேட்ட  கள்ள போட்ட அந்த வாலிபர் அங்கிருந்து தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட ரவிச்சந்திர ஹாசன், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, வில்லிவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அப்போது, போலீசார் கள்ள ஓட்டு போட்ட வாலிபருக்கு ஆதரவாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரவிச்சந்திர ஹாசன் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், கள்ள ஓட்டு போட்ட வாலிபரை   வில்லிவாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பென்னலூர்பேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி 284ல் நேற்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. பிற்பகல் 1 மணிக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ், அமுதா ஆகியோர் வாக்களிக்க வந்தனர். இதையறிந்த திமுக பூத் ஏஜென்ட்கள், “3 பேருக்கும் ஆந்திராவில் ஓட்டு உள்ளது. அவர்கள் இங்கு எப்படி ஓட்டு போட முடியும்,” என்றனர்.

இதையறிந்த அதிமுக பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா அங்கு வந்து, “அவர்களுக்கு ஆந்திராவில் ஓட்டு இல்லை,” என கூறி அவர்களை ஓட்டு போடவைக்க முயன்றார். திமுகவினர் அதை தடுத்து நிறுத்தினர். அப்போது வெங்கட்ரமணா பூத்தை உள்பக்கமாக மூடி அவர்களை ஓட்டு போட வைக்க முயன்றதாகவும், ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கள்ள ஓட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூடிக்கிடந்த பூத்தை திறந்து வெங்கட்ரமணா மற்றும் கள்ள ஓட்டு போட வந்த ஆந்திராவை சேர்ந்தவர்களை வெளியேற்றினர். இதனால் ஒரு மணி நேரமாக வாக்குச்சாவடி மையம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டு மீண்டும் வாக்கு அளிக்கும் பணி தொடங்கியது.



Tags : Wickwakam ,Assembly , Counterfeit driving in Willowbrook Assembly constituency: Handing over to police
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...