×

கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழிஇயன்முறை மருத்துவம் என்பது இருபது வருடங்களுக்கு முன்னால் அவ்வளவாகத் தெரியாத ஒரு மருத்துவத் துறையாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ, ‘‘ஒரு மாசமா கழுத்து வலியா இருந்தது. அதான் பிசியோதெரபிக்கு போனேன். இப்போ வலியும் இல்லை… மாத்திரைகளால் வர்ற பக்கவிளைவுகளும் இல்லை” என்று பலர் விழிப்புணர்வோடு சொல்லும் அளவுக்கு வளர்ந்து பிரபலமாகி இருக்கிறது.ஆனால் இன்னமும் முழுமையாக இயன்முறை மருத்துவர்கள் என்னென்ன மருத்துவம் செய்வார்கள்? எந்தெந்த வகையில் அவர்களது பங்கு இருக்கிறது? என்பதை பலரும் தெரியாமல்தான் இருக்கிறார்கள். அந்த அறியாமையை போக்குவதற்காகவே இந்தக் கட்டுரை.இயன்முறை மருத்துவ உபகரணங்கள்…* வெவ்வேறு விதமான உபகரணங்கள் மின் வசதி மூலம் இயங்கும் வழியில் பயன்படுத்துகிறோம்.* அதிர்வு (Vibration), சுடு உணர்வு, ஒலி அலைகள் (Ultra sound waves), லேசர் கதிர்கள், ஒளி (Light) கதிர்கள் என பலதரப்பட்ட உபகரணங்கள் உண்டு.* ஒவ்வோர் உபகரணமும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு விதமான வலிகளுக்குப் பயன்படும். இதில் எதனை குறிப்பிட்ட நோயாளிக்கு தர வேண்டும் என இயன்முறை மருத்துவர் பரிந்துரைத்து முடிவு செய்வார்.உடற்பயிற்சிகள் பலவிதம்…தசைகளை வலிமையாக்க, தசைகள் இறுக்கமாக இல்லாமல் இலகுவாக வைத்துக்கொள்ள, ஏதேனும் பிரச்சனையால் செயலிழந்த தசைகளை திரும்ப மீட்டெடுக்க, ‘இதய – நுரையீரலின்’ தாங்கும் ஆற்றலை அதிகரிக்க (Endurance) என பலதரப்பட்ட உடற்பயிற்சி வகைகள் இருக்கின்றன.விளையாட்டு வழி தெரபி…ஆட்டிசம், துறுதுறு குழந்தைகள், கவனக்குறைவு, உணர்ச்சி  செயலாக்க கோளாறுகள், டவுன் சிண்ட்ரோம் என பலதரப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த கோளாறுகளுக்கு விளையாட்டு வழியில் மருத்துவம் இருக்கிறது.குழந்தைகளுக்கு…* மூளை வாதம், தாமத படிநிலைகள், ஒரு சில பிறவி மற்றும் மரபணு சார்ந்த நோய்களால் நடக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு பிரத்யேக உடற்பயிற்சிகள் இருக்கின்றன.* குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் புரியாது என்பதால் இதனை இயன்முறை மருத்துவர் செய்வார்கள். இதனால் நரம்பு மண்டலத்தில் உடல் இயக்கங்களுக்கான பகுதி மேம்படுத்தப்பட்டு குழந்தைகளால் நடக்கமுடியும்.வேறு நுட்பங்கள்…மெனுபிளேஷன், மொபிலைசேஷன் என சில நுட்பங்கள் கைகளால் தசைகளுக்கு, எலும்புகளுக்கு, மென் திசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து சரி செய்வதாய் இருக்கும். தசைகளில் ஏதேனும் பாதிப்பு, எலும்பு முறிவுக்குப் பின் தசைகள் இலகுவாக என இந்த நுட்பங்களை பிரயோகிப்போம்.ஆன்லைன்…நேரடியாக சென்று சிகிச்சை எடுக்க முடியவில்லை என்றால், ஒரு சில பிரச்னைகளுக்கு ஆன்லைன் மூலம் தீர்வு காணலாம். அதாவது, தொடாமலேயே இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிப்பது. இந்த முறை சிகிச்சை கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.தண்ணீரில்…மேலே குறிப்பிட்ட  குழந்தைகளின் பிரச்சனைகள், பெரியவர்களுக்கு fitness மற்றும் வேறு சில பிரச்னைகளுக்கு என தண்ணீரில் (Swimming Pool) சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சை முறையும் பல வருடங்களாக இருக்கிறது.Fitness…ஒவ்வோர் உடற்பயிற்சிக் கூடத்திலும் இயன்முறை மருத்துவர்கள் இருப்பது அவசியம். ஏனெனில் இயன்முறை மருத்துவர்கள்தான் ஒருவரது தசைகளை முற்றிலும் பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தவாறு எத்தனை முறை என்ன பயிற்சிகள் செய்யவேண்டும் என பரிந்துரைத்து கற்றும் கொடுப்பார்கள்.ஐ.சி.யுவில்…பெரும்பாலும் ஐ.சி.யுவில் இருப்பவர்கள் உட்கார, நடக்க முடியாது என்பதால், அவர்களின் ரத்த ஓட்டம் சீராக இருக்க பயிற்சிகள், சளி சேர்ந்திருந்தால் வெளியேற்றுவது, மூச்சுப் பயிற்சிகள் என சில வகை சிகிச்சைகள் வழங்குவார்கள்.விளையாட்டு துறை…விளையாட்டு வீரர்களுக்கு ஏதேனும் தசை காயம் (injury) ஏற்பட்டால் சிகிச்சை தருவதும், காயம் வராமல் இருக்க பயிற்சிகளும் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர். மேலும் விளையாட்டு வீரரின் உத்திகள் (டெக்னிக்ஸ் ) சரியாக இருக்கிறதா, ஏன் காயம் ஏற்படுகிறது,  வராமல் தடுக்க உத்திகளில் எதனை மாற்றவேண்டும் என்பது போன்ற முக்கியமான விஷயங்களிலும் பங்கு இருக்கிறது.பணிபுரியும் இடங்கள்…* ஒவ்வொரு தொழிலிலும் எவ்வாறு வேலைகளை செய்தால் உடலுக்கு சிரமம் தராமல் இருக்கும், எப்படி பொருட்களை கையாள்வது, எந்த மாதிரியான இருக்கைகள் தேர்வு செய்வது  என இயன்முறை மருத்துவர்கள் கற்றுக்கொடுப்பர்.* எனவே ஐ.டி அலுவலகம் முதல் தையல் வேலை செய்யும் இடம் வரை இயன்முறை மருத்துவரின் பங்கு இன்றியமையாதது.தாய்மார்களுக்கு…கரு உருவாவதற்கு, கரு உருவான பின் பிரசவம் வரை செய்ய வேண்டிய பயிற்சிகள், குழந்தை பிறந்த பிறகு செய்யவேண்டிய பயிற்சிகள் என ஒவ்வொரு படிநிலைகளிலும் உடற்பயிற்சிகள் இருக்கின்றன.பெரியவர்களுக்கு…முதியோர்களின் உடல் அசைவுகள் சார்ந்த  சிக்கல்களுக்கு இயன்முறை மருத்துவ பயிற்சிகள் உண்டு.சில நிறுவனங்களில்…* செருப்பு, ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில் இயன்முறை மருத்துவர்கள் பணி புரிவார்கள். எந்த வகை காலணிகள் கால்களுக்கு நல்லது, காலணிகளில் ஆரோக்கியம் சார்ந்து என்னென்ன மாற்றங்கள் செய்வது என பணிபுரிவார்கள்.* நடப்பதற்கு தேவையான சாதனங்கள்  (Walker, Crutches) செய்யும் இடங்களிலும் இயன்முறை மருத்துவர் ஒவ்வொரு சாதனத்தின் அளவு, டிசைன் என ஒவ்வொன்றையும் பரிந்துரைத்து தேர்வு செய்வார்கள்.* செயற்கை கை மற்றும் கால்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகள்…இவ்வகை பள்ளிகள் கற்பிப்பது மட்டுமின்றி இயன்முறை மருத்துவம், பேச்சுப் பயிற்சி என எல்லாவற்றையும் சேர்த்து வழங்குவார்கள் என்பதால், இங்கும் குழந்தைகளுக்கான இயன்முறை மருத்துவர்கள் பணிபுரிவார்கள்.அறுவை சிகிச்சை…பெரும்பான்மையான அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும், பின்பும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பதால், இயன்முறை மருத்துவர் இவற்றை பரிந்துரைத்து கற்றும் கொடுப்பார்கள்.வேறு சிறப்புப் பிரிவுகள்…1. தீக்காயம்: பிழைக்கும் அளவுக்கு தீக்காயம் இருப்பவர்களுக்கு அவர்களின் எல்லா அசைவுகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே மீண்டும் அசைவுகளை கொண்டு வர அவர்கள் காயத்தினூடே  உடற்பயிற்சிகள் வழங்கப்படும். இதனால் காயம் ஆறிய பின் இயல்பாக அவர்களால் அசைவுகளை தொடர முடியும். நம் சென்னை கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் இதற்கான சிறப்புப் பிரிவு உள்ளது. அங்கு தினமும் இயன்முறை மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதை பார்க்கலாம்.2. கைகளுக்காக : கைகளில் அதாவது, முழங்கையில் இருந்து நுனி விரல் வரை எந்தப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படும். இதனால் இயல்பாய் மீண்டும் வேலைகளை கைகளில் செய்ய முடியும். நம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இதற்காகவே  சிறப்பு தனிப்பிரிவு உள்ளது.

இன்னும் சில…

* சில பிறவிக் குறைபாடுகள், மரபணு சார்ந்த நோய்களிலும் இயன்முறை மருத்துவரின் பங்கு உள்ளது.* ஏதோ ஒரு விபத்தினால் நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பது (உதாரணமாக, ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டால் எவ்வாறு, எப்படி நடக்க வேண்டும், உடற்பயிற்சிகள் என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர்).என்ன செய்ய மாட்டார்கள்…?* இயன்முறை மருத்துவர்கள் மாத்திரை, மருந்துகள், களிம்புகள் (ointments) பரிந்துரைக்க மாட்டார்கள்.* ஊசி, தையல் போடுவது என எதுவும் பயன்படுத்த மாட்டார்கள்.போலிகளை அறிவோம்…ஏதேனும் உடலியல் சார்ந்த ஆறு மாத கோர்ஸ்களை முடித்துவிட்டு இயன்முறை மருத்துவர்கள் என கிளினிக் வைக்கும் சிலரும் இருக்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இயன்முறை மருத்துவப் படிப்பு நான்கு வருடமும் பின் ஆறு மாத பயிற்சி வேலை காலமும் இருக்கும். அதனால், நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள போகும் மருத்துவர் எங்கு, என்ன படித்திருக்கிறார் போன்ற கேள்விகளைக் கேட்டு பயத்தை தெளிவுபடுத்திக் கொள்வதில் தவறில்லை.மொத்தத்தில் எந்த ஒரு துறையை பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது. அதிலும் இயன்முறை மருத்துவம் போன்ற மருத்துவத் துறையில் இருக்கும் ஒரு துறையை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது என்பது, காலத்தின் அவசியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டியது மிக முக்கியம்….

The post கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!