காற்றில் பறக்கும் அரசு வழிகாட்டு நெறிமுறை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கில் கையுறை: வாக்காளர்கள் அதிருப்தி

சென்னை: கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கையுறை வழங்கப்பட்டது. மேலும், வாக்குச்சாவடியின் வாசலில் ஊழியர் ஒருவர் வழங்கும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரே, வாக்குச்சாவடியின் உள்ளே வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட கையுறை தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு வாக்குச்சாவடி எண் 118ல் பொருத்தப்பட்டிருந்த கேமரா கழன்று விழுந்தது. இதனால் வேறு வழியின்றி கண்காணிப்பு கேமரா இல்லாமலே வாக்குப்பதிவு நடைபெற்றது.

புதுப்பாக்கம் ஊராட்சியில் 47 எண் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய அமுதவள்ளி என்பவர் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து புதுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் பொன்னுதுரை அவரை தனது காரில் அழைத்துச்சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். வாக்குச்சாவடி அலுவலர் இல்லாததால் தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. அந்த மையத்தைச் சுற்றி யாரும் செல்லாத வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அரை மணி நேரம் கழித்து மாற்று அலுவலர் வந்து பொறுப்பேற்றவுடன் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

வாக்களிக்க வெளியே வராத அடுக்குமாடி இளைய தலைமுறை

சென்னைப் புறநகர் பகுதியான தாழம்பூர், நாவலூர், படூர், புதுப்பாக்கம், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் இந்த குடியிருப்புகளை வாங்கி வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான குடியிருப்புவாசிகள் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1 வருடமாக கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் இவர்களை நேரடியாக வந்து வேலை செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் வீட்டிலிருந்தபடியே வேலை என்ற அடிப்படையில் இவர்கள் வேலை செய்து வருகின்றனர். அடுக்குமாடி, குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த நிலையில் இளைய தலைமுறையினர் மிகவும் குறைவாகவே வந்து வாக்களித்தனர். ஆனால், அதே ஊர்களில் நிரந்தரமாக குடியிருப்பவர்களில் 90 சதவீதம் பேர் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

Related Stories:

>