வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்காததால் பொதுமக்கள் ஓட்டு போட முடியாமல் அவதி: தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பூத் சிலிப் கிடைக்காததால், நேற்று பொதுமக்கள் எங்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் அவதிப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கை அனைவரும் கண்டித்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி (நேற்று) ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 88,937 வாக்குச்சாவடி மையங்களிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஒரு சில மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறிது காலதாமதம் ஏற்பட்டது.முன்னதாக தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் கட்சியினர் யாரும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், எந்த பள்ளியில் வாக்களிக்க வேண்டும், பூத் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர். ஆனால் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் வரை பூத் சிலிப் வழங்கப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல்ஆணையாளர்  சத்யபிரதா சாகுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர், உடனடியாக பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

ஆனால் பெரும்பாலான வீடுகளுக்கு கடைசி வரை பூத் சிலிப் வழங்கப்படவில்லை.நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்க முயன்றனர். கடந்த தேர்தலில் வாக்களித்த மையங்களில் அவர்கள் வாக்களிக்க வந்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுக்க 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் என்று இருந்த நிலையில், கூடுதலாக 22 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டு 88,937 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது.இதனால் பொதுமக்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரியாமல் குழம்பினர். தேர்தல் ஆணையம் வழங்குவதாக அறிவித்திருந்த பூத் சிலிப் கிடைக்காததால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் இருந்த அலுவலர்கள், போலீசாரிடம் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி கேட்டனர். ஆனால் அவர்களுக்கும் எந்த மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல தெரியவில்லை. இதனால் வயதானவர்கள் வாக்களிக்க முடியாமல் சிலர் வீடு திரும்பினர். குறிப்பாக சென்னையில் பலருக்கும் பூத் சிலிப் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ”ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் சார்பில் வீடு வீடாக வந்து பூத் சிலிப் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் நாங்கள் எந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பது எளிதாக இருந்தது. அரசியல் கட்சிகள் பூத் சிலிப் கொடுக்க வரும்போது, பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணையமே கடந்த இரண்டு, மூன்று தேர்தல்களில் பூத் சிலிப் வழங்கி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் மெத்தன போக்காமல் பூத் சிலிப் எங்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த தேர்தலிலும் இதுபோன்ற தவறு நடந்தது. தற்போதும் அதே தவறை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டாலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கும் பணிகள் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதில் அக்கறை காட்டவில்லை. இனியாவது தேர்தல் ஆணையம் உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்றனர். தேர்தல் ஆணையத்தின் மெத்தன போக்கால் பூத் சிலிப் எங்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த தேர்தலிலும் இதுபோன்ற தவறு நடந்தது. தற்போதும் அதே தவறை செய்துள்ளனர்.

Related Stories:

>