×

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு: வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்

சென்னை: சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் காலை 8.15 மணியளவில் வாக்களித்தார். இதற்காக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் உ டன்காலை 7.50 மணிக்கு வாக்குசாவடிக்கு வந்தார். அங்கு வாக்களிக்க நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த தேர்தல் அதிகாரி வரிசையில் நிற்க வேண்டாம். முன்பாக சென்று வாக்களிக்குமாறு கூறினர். அதை மு.க.ஸ்டாலின் மறுத்து, மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான ேசலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெரிய குளத்தில் உள்ள சவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் விநாயகர் தெருவில் உள்ள கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியிலும், மதிமுக பொது செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கலிங்கப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர். பாஜ தலைவர் எல்.முருகன் கோயம்பேடு குடியிருப்பில் தனது வீட்டு அருகில் உள்ள வாக்குசாவடியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டி வேலூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளியில் காலை 8 மணிக்கும், தேசிய பொது செயலாளர் டி.ராஜா சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில் காலை 10 மணிக்கும், ஆர்.நல்லக்கண்ணு சிஐடிநகர் 4வது பிரதான சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியிலும் வாக்களித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், தேமுதிக பொருளார் பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளியிலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை பீமண்ண தோட்டம் சென்னை மேல்நிலைப்பள்ளியிலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அடையாறு பாப்பான்சாவடி காமராஜர் நகர் 2வது அவென்யூவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர் நிலைபள்ளியிலும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் வேளாங்கண்ணி பள்ளியிலும், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு தாமோதரபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தனர். இதில் எல்.முருகன் தாராபுரத்திலும், கமலஹாசன் கோவை தெற்கிலும், பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்திலும் போட்டியிடுகின்றனர். அவர்கள் வாக்களித்ததும் தங்கள் தொகுதிகளுக்கு வாக்களிப்பை பார்வையிடுவதற்காக வாக்களித்த உடன் புறப்பட்டு சென்றனர்.

Tags : MK Stalin ,Edappadi ,OPS , Legislature General Election, MK Stalin, Edappadi, OPS, Voting
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்