மீண்டும் ஊரடங்கு என்ற புரளியை நம்ப வேண்டாம் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் கூடுதல் கவனம்: தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று கொரோனாவால்  3,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் 9ம் தேதி முதல் மீண்டும் அறிவிக்கப்பட உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதனால் மக்கள் மத்தியில் சொல்லமுடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதற்காக வேறு ஒரு மாநிலத்தின் அறிவிப்பை மாற்றி தமிழகத்தில் செயல்படுத்த போவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

மீண்டும் கொரோனா ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் தற்போது உள்ள 925 கொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் தீவிர கண்காணிப்பும், கட்டுப்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்ததைப்போல் களப்பணியாளர்களை பணியமர்த்தி வீடுகளுக்கு நேரில் சென்று ெசன்னை காய்ச்சல், இருமல் போன்ற சோதனைகளை நடத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தற்போதுள்ள பாதிப்பு வெகுவாக குறைந்து விடும். எனவே, அரசு தரப்பிலிருந்து தகவல் வெளிவராமல் வேற எந்த தகவலையும் மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பு குறித்து அப்போதைக்கு அப்போது உரிய அறிவுறுத்தல்களை அரசு வெளியிடும் என்றனர்.

Related Stories:

>