ஆவடி, விருதுநகர், திருவையாறு, நாகர்கோவில் வாக்குச்சாவடியில் பரபரப்பு வாக்களித்தது உதயசூரியனுக்கு... விழுந்தது தாமரை சின்னத்துக்கு: வாக்குப்பதிவு நிறுத்தம்

சென்னை: விருதுநகர், திருவையாறு, நாகர்கோவிலில் உள்ள வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கு போட்ட ஓட்டு, தாமரையில் விழுந்ததாக தகவல் பரவியதால் சுமார் 1.30 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. விருதுநகர் தொகுதியில் விருதுநகர் நகராட்சி பின்புறமுள்ள சத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளி மையத்தில், வாக்குச்சாவடி எண் 139ல் 947 வாக்காளர்கள் உள்ளனர். 303வது வாக்காளராக காலை 11.40 மணியளவில் இடும்பன் நீராவி தெருவை சேர்ந்த குணசேகரன் (22) தனது ஓட்டை பதிவு செய்தார். அவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிவு செய்த வாக்கு, விவிபேட் இயந்திரத்தில் தாமரைக்கு விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வாக்குச்சாவடி தலைமை பெண் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தகவலறிந்ததும் திமுக, காங்கிரஸ், அமமுக, பாஜ கட்சியினர் அங்கு குவிந்தனர். தொடர்ந்து வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள், பூத் முகவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. தேர்தல் அலுவலர் சந்தானலட்சுமி, உதவி தேர்தல் அலுவலர் ரமணன் வாக்குச்சாவடிக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் வாக்காளர் குணசேகரனிடம், தேர்தல் அலுவலர்கள் சோதனை முறையில் ஓட்டை பதிவு செய்ய எழுத்துப்பூர்வமாக கையெழுத்து பெற்றனர். அதில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக எழுதி கையெழுத்து வாங்கினர்.

பின்னர் அளிக்கப்பட்ட சோதனை முறை ஓட்டை அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் பகல் 1.10 மணியளவில் மீண்டும் பதிவு செய்தார். அப்போது அவரின் வாக்கு சரியான சின்னத்தில் பதிவானது. அதைத்தொடர்ந்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இந்த பிரச்னையால் அங்கு சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் முகமது பந்தரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 172வது பூத்தில் திமுக வழக்கறிஞர் ராஜாமுகமது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தபோது விவிபேட் இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டியுள்ளது. அவர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதையடுத்து காலை 11 மணியளவில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள், வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் சின்னம் சரியாக தெரிந்ததா என்று கேட்கும்படி திமுகவினரிடம் கூறினர். அதன்படி கேட்டதற்கு சரியாகதான் உள்ளது என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மீண்டும் 12.30 மணிக்கு வாக்குப்பதிவு நடந்தது.நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சுங்கான்கடை அரசு தொடக்க பள்ளி, 299வது எண்ணுள்ள வாக்கு சாவடியில், எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு விழுவதாக தகவல் பரவியது. இதனால், அங்கு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தொலைக்காட்சி கேமரா மேன்கள் வாக்கு சாவடிக்குள் படம் எடுக்க முயன்றனர். இதற்கு இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். எஸ்.பியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இன்ஸ்பெக்டர் வெளியேறினார். இதையடுத்து வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் வேறு இயந்திரம் கொண்டு வந்து, அதில் வாக்குப்பதிவை தொடர்ந்தனர்.

ஆவடியில் இரட்டை இலைக்கு பதிவான திமுக வாக்கு

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பருத்திப்பட்டு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த மையத்தில் நேற்று காலை 11 மணியளவில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு பட்டனை அழுத்தினால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு பதிவு ஆவதாக வாக்களித்த ஒரு சில வாக்காளர்கள் சந்தேகத்தின் பேரில் புகார் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆவடி நாசரின் முகவர்கள் உடனடியாக அந்த வாக்குச் சாவடி மையத்திற்கு விரைந்து சென்று வாக்குப்பதிவு அலுவலர்களிடம் விவரங்களை கேட்டனர். அதன் பிறகு அவர்கள் முன்னிலையில் ஒருசில வாக்காளர்களை வைத்து ஓட்டு போடச்சொல்லி பரிசோதனை செய்தனர். அப்பொழுது வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகள் எந்த சின்னத்திற்கு அவர்கள் வாக்களித்தார்களோ அந்த சின்னத்திற்கே சரியாக பதிவானது. இதனால் அங்கு கூறப்பட்ட புகார் மீது மேல் நடவடிக்கை எதுவும் கேட்காமல் கைவிடப்பட்டது.

Related Stories: