×

இன்று முதல் கர்நாடகாவில் பஸ் ஸ்டிரைக்

பெங்களூரு: தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு விதித்த கெடு முடிந்ததால், கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குகின்றனர். கர்நாடக போக்குவரத்து கழகம், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், வடகிழக்கு மற்றும் வடமேற்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது, ஊழியர் சங்க தலைவர்களுடன் துணை முதல்வரும் போக்குவரத்து துறை அமைச்சருமான லட்சுமண்சவதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், போக்குவரத்து கழக ஊழியர்களை நேரடியாக அரசு ஊழியர்களாக மாற்றம் செய்யும் கோரிக்கை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டு நான்கு மாதங்கள் முடிந்தும், கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் ஏப்ரல் 6ம் தேதிக்குள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால், 7ம் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர். இந்த கெடு நேற்றுடன் முடிந்தது. இதனால், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் சங்க கவுரவதலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் நடந்தது. இதில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

Tags : Karnataka , Today, in Karnataka, the bus strike
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!