×

மேற்கு வங்கத்தில் மட்டும் அடிதடி, கலாட்டா 4 மாநிலங்களில் தேர்தல் முடிந்தது: கேரளா, அசாமில் அமைதியான வாக்குப்பதிவு

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் முடிந்தது. மேற்கு வங்கத்தில் நடந்த 3ம் கட்ட தேர்தல் அதிகளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. திரிணாமுல், பாஜ வேட்பாளர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, மேற்கு வங்கம், அசாமில் ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், நேற்று 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 5 மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேரளாவில் 140 தொகுதிகளில் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவில் ஆங்காங்கே சிறு சிறு வன்முறைகள் நடந்தன. பத்தினம்திட்டாவில் அரண்முலா மற்றும் கோட்டயத்தில் சாவித்துவரி தொகுதிகளில் வரிசையில் நின்ற 2 வாக்காளர்கள் மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் கழகோட்டம் தொகுதியில் மார்க்சிஸ்ட், பாஜ.வினர்  இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பாஜவினர் காயமடைந்தனர். கண்ணூர் தர்மடோம் தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்வர் பினராய் விஜயன் வாக்களித்தபின் அளித்த பேட்டியில், ‘‘மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வரலாற்று வெற்றி பெறும். பாஜ கடந்த முறை வென்ற நேமம் தொகுதி கூட இம்முறை கிடைக்காது,’’ என்றார். காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ‘‘ஐயப்ப பக்தர்கள் இடது முன்னணியை மன்னிக்கவே மாட்டார்கள்’’ என பேசினார். இது குறித்து அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அசாமில் 126 தொகுதிகளில் மீதமுள்ள 40 தொகுதிகளில் 3வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. சில இடங்களில் வாக்கு இயந்திரம் கோளாறு, சிறு மோதல் காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. மற்றபடி அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 31 இடங்களுக்கு நேற்று 3ம் கட்ட தேர்தல் நடந்தது. 31 தொகுதிகளுமே பதற்றமானவை என அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு காலையில் தொடங்கியதில் இருந்தே பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. உலுபெரியா தொகுதியில் பாஜ வேட்பாளர் பபியா அதிகாரி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் வேட்பாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. தரகேஷ்வர் பாஜ வேட்பாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, திரிணாமுல் தொண்டர்களால் தாக்கப்பட்டதாகவும், அராண்டி பகுதியில் திரிணாமுல் வேட்பாளர் மோண்டல் பாஜ கட்சியினரால் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. திரிணாமுல் வேட்பாளர் நிர்மல் மாஜி தன்னை பாஜவினர் அவதூறாக பேசி, வாகனத்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். பாஜ கட்சியின் பூத்களை கைப்பற்றுவதாகவும், திரிணாமுல் வேட்பாளர்களை தாக்குவதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தனது தேர்தல் பிரசாரத்தில் குற்றம்சாட்டினார். நேற்றுடன் தமிழகம் உள்ளிட்ட 4 மாநில தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் மட்டுமே வரும் 29ம் தேதி வரை இன்னும் 5 கட்ட தேர்தல் எஞ்சியுள்ளது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். ஒட்டு மொத்தமாக நேற்று 475 தொகுதிகளில் 1.5 லட்சம் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடந்தது.

திரிணாமுல் தலைவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம்

நேற்று வாக்குப்பதிவுக்கு முன்பாக அதிகாலையில் மேற்கு வங்க மாநிலம் உலுபெரியா தொகுதிக்கு உட்பட்ட துளசிபெரியா கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டின் முன்பாக தேர்தல் ஆணைய ஸ்டிக்கருடன் கூடிய வாகனம் நின்றிருப்பதை பார்த்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை செய்த போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் 4 மின்னணு வாக்கு இயந்திரங்கள், வாக்குச்சீட்டு இயந்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


Tags : West Bengal ,Kerala ,Assam , In West Bengal, the by-elections, in Galata, 4 states, are over
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...