×

கோவில்பட்டி வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட காங். நிர்வாகி திடீரென மயங்கி விழுந்து சாவு

கோவில்பட்டி: கோவில்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்த காங்கிரஸ் நிர்வாகி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதிநகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (57). இவரது மனைவி ஜோதிலட்சுமி (54). தம்பதிக்கு சொர்ணலட்சுமி (25) என்ற மகளும்,  பிரகாஷ் (13) என்ற மகனும் உள்ளனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளராக இருந்து வந்த இவர், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத்திற்கு சென்று நேற்று காலை வாக்களித்தார்.

பின்னர் திடீரென மயங்கி விழுந்த அவரை வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்டோர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை  பலனின்றி சிறிது நேரத்தில் இறந்தார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆதரவாக கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டு போட வந்தவர் வாக்குசாவடி மையத்தில் மயங்கி விழுந்து பலி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி அய்யம்பேட்டையில் உள்ள சார்லைன் பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த வாக்குசாவடி மையத்திற்கு அய்யம்பேட்டை கீழவீதியை சேர்ந்த அர்ஜூனன் (64) என்பவர் வாக்களிக்க வந்தார். அங்கு ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த அர்ஜூனன், திடீரென வாக்குசாவடி மைய வாசலிலேயே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர் திடீர் மரணம்
சிவகங்கை மாவட்டம், கல்லல் திருவேகம்புத்தூர் அருகே பொண்னளிக்கோட்டையை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (40). திருப்பத்தூர் அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். தேர்தல் பணிக்காக நேற்று முன்தினம் இரவு காரையூருக்கு வந்த அவருக்கு, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காரையூரில் இருந்த அவரை, உறவினர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே ரஜினிகாந்த் இறந்து விட்டார்.

Tags : Kovilpatti , Kovilpatti, Polling Station, Cong. Administrator, fainting, death
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா