சேலம் அருகே சொந்த கிராமத்தில் குடும்பத்தினருடன் வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சேலம்: தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது சொந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இதற்காக சிலுவம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். முன்னதாக எம்ஜிஆர், ஜெயலலிதா, தனது தாயார் படத்திற்கு மாலையிட்டு வணங்கிய அவர், மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோருடன் நடந்து வீட்டருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்கு மையத்திற்கு வந்தார். வாக்காளர்களுடன் வரிசையில் காத்திருந்த அவருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மற்றும் மாஸ்க் வழங்கப்பட்டது. சரியாக 10.45 மணிக்கு அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதேபோல் பெண்களுக்கான வரிசையில் நின்று அவரது மனைவி ராதா, மருமகள் ஆகியோர் வாக்களித்தனர். வாக்களித்து விட்டு வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், `தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார். முதல்வர் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்னதாக காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய கோயில்களில் பூஜை செய்யப்பட்ட சிறப்பு பிரசாதத்தை அங்குள்ள கோயில் நிர்வாகிகள் வந்து வழங்கினர்.

ஓபிஎஸ் வாக்குப்பதிவு

தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே நர்சரி பள்ளி  வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது தாயார் பழனியம்மாள், மனைவி  விஜயலட்சுமி, இளைய மகன் ஜெயபிரதீப், ரவீந்திரநாத் எம்பி, அவரது மனைவி ஆனந்தி  ஆகியோரும் வாக்குகளை பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கம்பம் அருகே, சொந்த ஊரான நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்  வாக்களித்தார்.

Related Stories:

>