×

பெரம்பலூரில் பெண்கள் மட்டுமே வாக்களிக்க பிங்க் நிறத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு!!

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடிய “பிங்க் நிற” 4 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில், 342 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 816 வாக்குச்சாவடிகளில் 2,82,531 ஆண் வாக்காளர்கள், 2,93,587 பெண் வாக்காளர்கள், 35 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,76,153 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த 816 வாக்குச்சாவடிகளில் 4 வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடிய “பிங்க் நிற”வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண்-191 ஏ என்ற வாக்குச்சாவடி மகளிர் மட்டும் வாக்களிக்க கூடிய வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 601 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதே வளாகத்தில் வாக்குச்சாவடி எண்- 207ஏ என்ற வாக்குச்சாவடி 603 பெண் வாக்காளர்கள் வாக்களிக்ககூடிய வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் -143ஏ என்ற வாக்குச்சாவடியில் 598 பெண்களும், பெரியாகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி ஆர்எம்எஸ்ஏ கட்டிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண்-255ஏ என்ற வாக்குச்சாவடியில் 549 பெண்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் மகளிருக்காக அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளில் 2,351 பெண்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள், சுகாதாரப்பணியாளர், அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Perambalur , பிங்க் நிறத்தில்வாக்குச்சாவடி
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி