மயிலாப்பூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி!: 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாக்குகள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!!

சென்னை: மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பி.எம். தர்கா தெருவில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் இருந்து விடுபட்டிருக்கின்றன. இதனால் அவர்களுக்கு வாக்கு இல்லை என்ற சூழல் உருவாகியிருக்கிறது. சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பி.எம். தர்கா பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கடந்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இப்பகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்டோருக்கு வாக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, ஒரு குடும்பத்தில் 2, 3 நபர்களுக்கு வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தாங்கள் தவறாமல் வாக்களித்து வருகின்றோம். வாக்களிப்பது தங்களது ஜனநாயக கடமை. தற்போது தங்கள் குடும்பத்தில் பகுதியளவு மக்களுக்கு மட்டுமே வாக்கு செலுத்தும் அட்டை வந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் ஆதார் கார்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை கொண்டு வாக்கு செலுத்தலாம் என செய்தியில் ஒளிபரப்பப்பட்டது. இதனை நம்பி வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றால் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்கு செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இத்தனை ஆண்டுகாலம் தவறாமல் வாக்கு செலுத்தும் தங்களால் இம்முறை வாக்கு செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தாங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர். மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பி.எம். தர்கா தெரு வாக்குச்சாவடியில் இஸ்லாமியர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் இருந்து விடுபட்டிருப்பது இஸ்லாமியர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Related Stories:

>