×

நாகர்கோவிலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி?: எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக-வுக்கு வாக்குப்பதிவு..பொதுமக்கள் புகார்..!!

குமரி: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் விதிமீறல்களும் ஒருபுறம் அரங்கேறியவண்ணம் இருக்கிறது. நாகர்கோவிலில் மின்னணு வாக்குபதிவில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்குகள் பதிவாவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத்தின் இடைத்தேர்தலும் நடைபெற்று வருகின்றது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில் அருகே சுங்கங்கடை என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் மொத்தம் 3 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் 2 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் போது ஒலி எழாத நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் விழுவதாக புகார் எழுந்தது. இதுபற்றி அங்குள்ள அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அந்த மையத்திற்கு சென்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து இடையூறு செய்து பிரச்சனை செய்துள்ளனர். மேலும் தங்களை மீறி வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.  இதையடுத்து 3 மணி நேரத்திற்கு பிறகு வேறொரு மின்னணு வாக்கு இயந்திரம்  கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பதிவு செய்யப்பட்ட இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் நிலை என்ன என்பது அங்குள்ள மக்களின் கேள்வியாக இருக்கிறது.


Tags : Nagargov ,Ballot ,Pajaga , Nagercoil, Electronic Voting Machine, BJP, Voting
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...