×

சித்தூர் பஜார் தெருவில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சித்தூர் : சித்தூர் பஜார் தெருவில் தேங்கியுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்தூர் மாவட்டத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரிக்கின்றனர். பின்னர், மாவட்டத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தூர் பஜார் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்த வீடுகளில் இருந்து மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கின்றனர். அந்த குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்புகின்றனர். அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று தனித்தனியாக தரம் பிரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வீடுகளில் குப்பைகள் சேகரிக்க ஊழியர்கள் வரவில்லையாம். இதனால், அப்பகுதிமக்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து தெருவின் ஒரு ஓரத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதிமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chittoor Bazaar Street , Chittoor: Garbage piled up in Chittoor Bazaar Street has caused health problems.
× RELATED சித்தூர் பஜார் தெருவில் உள்ள நகை...