ஒசூர் :ஓசூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி பெங்களூரு நகர் வழியாக, தமிழகத்தின் கொடியாளம் கிராமத்தின் அருகே தமிழக பகுதிக்குள் நுழைகிறது. இந்த அணையின் இருபக்கமும் 2 கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கால்வாய்கள் மூலம் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயிகள் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். தற்போது, கெலவரப்பள்ளி அணையில் ஆகாயத்தாமரை அதிகளவில் படர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கடும் வெயிலுக்கு தண்ணீர் ஆவியாகி வீணாகிறது. எனவே, அணையில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.