திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,885 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு

*8 தொகுதிகளில் 122 வேட்பாளர்கள் போட்டி

*20.77 லட்சம் பேர் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள்

திருவண்ணாமலை : தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, செங்கம் (தனி), கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,885 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. 20 லட்சத்து, 77 ஆயிரத்து 440 வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். முன்னதாக, முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும். அதைத்தொடர்ந்து, உணவு இடைவேளை எதுவும் இல்லாமல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக ‘பூத் சிலிப்’ ஏற்கனவே வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் நிழற்பந்தல், குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு சரிவு பாதை மற்றும் தேவைக்குரிய இடங்களில் சக்கர நாற்காலி வசதி, மின் விளக்கு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் முதன் முறையாக, வாக்குச்சாவடிகளில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது. அதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உடல் வெப்ப பரிசோதனை, கையுறை வழங்குதல், கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மை செய்தல், சமூக இடைவெளி போன்றவை பின்பற்றப்படும்.

மேலும், 14 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று மாலையே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று சேர்ந்தனர். அதோடு, வாக்குச்சாவடிகளுக்கு நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. அந்த பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் 376 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் வெப் காமிரா பொருத்தப்பட்டு, ஆன்லைனில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 135 நுண் பார்வையாளர்கள், 211 மண்டல அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், 1,340 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 1,800 போலீசார், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 400 போலீசார், 920 துணை ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் களத்தில் 122 வேட்பாளர்கள்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு ஆகிய தொகுதிகளில் தலா 15 வேட்பாளர்களும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 21 வேட்பாளர்களும், வந்தவாசி தொகுதியில் குறைந்தபட்சமாக 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) பயன்படுத்தப்படுகிறது. மற்ற 7 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Related Stories:

>