×

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் அதிகாலையில் வாக்களித்தனர் !

சென்னை: தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

அதன்பின், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் கையுறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்கள்; 7,192 பேர் 3-ம் பாலினத்தவர். அத்தனை வேட்பாளர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் தயார். தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினி வாக்களித்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்துள்ளார். ரசிகர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அஜித், ஷாலினி முன்கூட்டியே வாக்களித்துச் சென்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தனது மகள்களுடன் வாக்களித்தார்.


Tags : elections ,Tamil Nadu ,Ajith , Tamil Nadu, Assembly Election, Voting
× RELATED பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது