×

கொரோனா தினசரி பாதிப்பு லட்சத்தை தாண்டியது ஏப்.8ல் பிரதமர் மோடி முதல்வர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில், நாளை மறுதினம் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 25 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று 1 லட்சத்தை தாண்டி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளி விவரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3,558 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ம் தேதி வெறும் 20 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 1 லட்சத்தை தாண்டி உள்ளது. இதிலிருந்தே 2வது அலையின் வேகத்தை உணரலாம்.

இதே போல, நேற்று ஒரே நாளில் 478 பேர் இறந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1 கோடியே 25 லட்சத்து 89,067 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 65,101 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாளை மறுதினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாதிப்பு அதிகரித்த போது, பிரதமர் மோடி தொடர்ச்சியாக மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது மீண்டும் பிரதமர், மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க இருப்பதால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, நாளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளார். எனவே மீண்டும் ஊரடங்குகள் பிறப்பிக்கபடுமா என்ற பீதி எழுந்துள்ளது.

* மகாராஷ்டிராவிலிருந்து வெளியேறுகின்றனர்
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு இரவு ஊரடங்கு, வார இறுதி நாளில் முழு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள், மால்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கபடலாம் என தகவல்கள் வெளியாகி வருவதால் பல வெளிமாநில தொழிலாளர்கள் மும்பை, புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களை விட்டு வெளியேறுகின்றனர். இதனால், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதுதவிர, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைப்பதிலும் மக்கள் அவசரம் காட்டுகின்றனர்.

பீகாரில் மாணவர்கள் வன்முறை
பீகாரில் கொரோனா அதிகரிப்பு காரணமாக கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சசாராம் பகுதியில் பயிற்சி நிலையம் ஒன்றை மூட அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர். அப்போது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மாணவர்களை விரட்ட முயன்றதால் வன்முறை வெடித்தது. மாணவர்கள் டயர்களை கொளுத்தியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது.

யோகிக்கு தடுப்பூசி
* இதுவரை நாடு முழுவதும் 8 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Tags : Modi , The daily impact of the corona has crossed one lakh. On April 8, Prime Minister Modi consulted with the chief ministers
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...