×

கொரோனா தடுப்பு நடவடிக்கை 7ம் தேதி முதல் தீவிரம் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து  துறையின் மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அத்துறையின் செல்வநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவற்றை முழுவீச்சில் செய்ய உள்ளோம். 7ம் தேதிக்கு மேல் முழு வீச்சில் அந்த பணிகளை மேற்கொள்வோம். தமிழகத்தில் 54 லட்சம் தடுப்பூசிகள் ஸ்டாக் உள்ளன.400க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் 15ஆயிரம் பேர்தான் நேற்று தடுப்பூசி போட்டனர். கொரோனா பாதிப்பு அதிகமாக சென்று கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வாருங்கள் என்று பிரசாரம் செய்ய முடியவில்லை. 7ம் தேதி முதல் அந்த பிரசாரம் தீவிரப்படுத்தப்படும். தடுப்பூசி இரண்டு முறை போட்ட பிறகும் கூட, சிலருக்கு நோய் பாதிப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கொரோனா தீவிர பாதிப்பாக அவர்களைத் தாக்காது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, தடுப்பூசி எந்த அளவுக்கு அவசியம் என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக லாக்டவுன் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். ஆனால் தலைமைச் செயலர் கூறியபடி, படிப்படியாக தேவைக்கேற்ப, அத்தியாவசியமற்ற பணிகளை கட்டுப்படுத்தலாம். மகாராஷ்டிரா மாதிரி நமக்கு நிலவரம் கை விட்டுப் போகாமல் இருக்கும் அளவுக்கு கட்டுப்பாடு தேவை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு கட்டுப்பாடு கொண்டு வரப்படும். தன்னார்வலர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பார்கள். திருமணம், இறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அதிகப்படியான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கலாசார நிகழ்ச்சிகள், தேவையற்ற பயணங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க வேண்டும். எந்த வகை கொரோனா வந்தாலும் அதற்கும் தடுப்பூசி தான் பாதுகாப்பு. எனவே, பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Radhakrishnan , Corona prevention measures to intensify from July 7: Health Secretary Radhakrishnan interview
× RELATED நாம் வாக்களித்தால் என்ன மாற்றம்...