வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா, இளவரசி பெயர் நீக்கம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதால் அந்த இல்லத்தில் வசித்த அவருடைய தோழி சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலா வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இந்நிலையில், போயஸ்கார்டன் இல்ல முகவரியில் தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஓட்டு இருந்தது. ஆனால், வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை அடுத்து ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது.

சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிவடைந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள நிலையில் அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என அமமுக வழக்கறிஞர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வேதா இல்லத்தில் வசித்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என அமமுக நிர்வாகியும், ஆயிரம் விளக்கு தொகுதி அமமுக வேட்பாளருமான வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் நீக்கப்பட்டது சட்டவிரோதமானது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்யும் போது அவர்கள் வேறு பகுதியில் வசித்தால் அந்த பகுதியில் அவர்களுக்கு வாக்குகளை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா தனது ஜனநாயக கடமையை ஆற்ற அவருக்கு வாக்குரிமையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை நடத்தக்கூடாது என்று தேர்தல் அலுவலரிடம் முறையிட்டுள்ளோம். ஒரு ஓட்டை குறைத்து மதிப்பிட வேண்டாம். இதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதியில் 19 ஆயிரம் அமமுக தொண்டர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

>