×

கருவை விட விலை மதிப்பற்றது வறுமை

நன்றி குங்குமம் தோழி

உலகின் பெரிய ஜனநாயக நாடாகப் பெருமை கொள்கிறது இந்தியா. இதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது மக்களவை தேர்தல். தேர்தல் நேரங்களில் மட்டும் எந்த கட்சியாக இருந்தாலும் அது செய்வோம், இது செய்வோம் என வாக்குறுதிகளை அள்ளி தெளிக்கின்றன.  ஆனால், ஆட்சிக்கு வந்த பின் அது நிறைவேறுமா என்ற ஏக்கத்துடனே இருப்பது வாக்களித்த மக்களின் மனநிலை மட்டுமே. இதில் பெரும்பாலான ஆட்சியாளர்களின் முக்கிய வாக்குறுதியாக இருப்பது வறுமை ஒழிப்பு. அப்படி வறுமை ஒழிந்திருந்தால் இந்த கதை உருவாகியிருக்காது.

சர்க்கரை உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தைப் பெற்றதாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் அதிகமாக சர்க்கரையை உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் சுமார் 5,00,000 ஏழை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கரும்பை வெட்டுவதற்காக பீட், சோலாப்பூர், கோலாப்பூர், சாங்லி, சதாரா ஆகிய மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். அவர்களில் பெண்கள் சரிபாதி. அதில் வேலைபார்க்கும் பெண்களுக்குக் கர்ப்பப்பைகள் நீக்கப்பட்டிருப்பதும், அதற்கான காரணமும் சற்று மனதை அதிர வைக்கிறது.

மாதவிடாய் சமயங்களில் பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பெண்களால் கடின உழைப்பில் அந்த நாட்கள் ஈடுபட முடியாது. அந்தச் சமயங்களில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால், ‘கரும்புத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கர்ப்பப்பையை நீக்கவேண்டும்’ எனக் கரும்புத் தோட்ட ஒப்பந்தகாரர்கள் வற்புறுத்துவதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர்.

“எங்கள் கிராமத்தில் கர்ப்பப்பையோடு ஒரு பெண்ணைப் பார்ப்பதென்பது அரிது. அனைத்துப் பெண்களுமே கர்ப்பப்பை நீக்கப்பட்டவர்கள்தான்” என்கிறார் மண்டா உகலே. மயக்கம் கொண்ட கண்களால் ஹிஜ்பூர் கிராமத்தில் தனது சிறிய வீட்டின் முன் அமர்ந்திருக்கும் இவரது பகுதி வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட மரத்வாட மாவட்டமாகும்.

இந்தக் கிராமத்துக்கு அருகில் உள்ள வஞ்சரவாடி என்ற கிராமத்தில் வசிக்கும் ஐம்பது சதவிகித பெண்களுக்குக் கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றபின் கருப்பை நீக்க வேண்டும் என்பது இந்த கிராமங்களில் உள்ள விதியாகவே மாறியுள்ளது. காரணம், வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் இவர்களது வாழ்க்கை.

இந்த பெண்கள் பெரும்பாலானோர் கரும்பு வெட்டும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள். கரும்பு வெட்டும் பருவங்களில் மேற்கு மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலைகள் நிறைந்த பகுதிக்கு இடம் பெயர்கிறார்கள். வறட்சி தீவிரமடையும் நிலையில், இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை
அதிகமாகிறது. “இங்கு வேலைக்கு அழைத்துச் செல்வதற்கு கான்ட்ராக்டர் அதிக முக்கியத்துவம் கொடுப்பது, கருப்பை நீக்கப்பட்ட பெண்களுக்குத் தான்” என்கிறார் சத்யபாமா.

அக்டோபர், மார்ச் மாதங்களில் லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள் இந்த பகுதிகளில் கரும்பு வெட்டுவதற்காக இடம் பெயர்கிறார்கள். அதில் கணவன், மனைவி ஒரே யூனிட்டில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். கருப்பு வெட்டுவது மிகவும் கடுமையான செயல்முறை. இதில் கணவனாலோ, மனைவியாலோ ஏதாவது ஒரு கரும்பில் முறிவு ஏற்பட்டால், ஒவ்வொரு முறிவுக்கும் அந்த தம்பதியினர் ரூ.500 ஒப்பந்தகாரர்களிடம் அபராதம் செலுத்த வேண்டும். விடுமுறை எடுத்தாலும் இதே நிலைதான்.

“கருப்பை அகற்றிய பின் மாதவிடாய் காலத்திற்கு வாய்ப்பில்லை. எனவே கரும்பு வெட்டும் போது விடுப்போ, ஓய்வோ எடுப்பதற்கான கேள்விகள் எழும் சூழல் உருவாகுவதில்லை. இதனால் ஒரு ரூபாய் கூட இழக்க முடியாது. மாதவிடாய் காலம் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் கூட உடல்நிலை சரியில்லாத நிலையில் விடுப்பு எடுக்க முடியாத அவலநிலை நிலவுகிறது” என்று கூறுகிறார் சத்யபாமா.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ ஓய்வெடுக்க நேர்வதால், இங்கு வேலை கெடுகிறது என்று கூறும் ஒப்பந்தகாரர்கள், “ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே கரும்பு வெட்டுவதற்கு இடையூறாக இருக்கும் மாதவிடாய் பெண்களை இங்கு விரும்புவதில்லை” என்கிறார் தாதா பட்டீல் என்னும் ஒப்பந்தகாரர். மேலும், பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நாங்கள் வலியுறுத்துவதில்லை, அது அவர்களின் குடும்பத்தினரின் விருப்பமாகும் என்கிறார்கள்.

பல பெண்கள் சொல்வது, ஒப்பந்தகாரர் அறுவை சிகிச்சை செய்வதற்காக முன் பணம் கொடுக்கிறார், அந்த பணத்தை எங்களின் ஊதியத்திலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.ததாபியை சேர்ந்த அச்யுத் போர்கோயன்கர் என்பவர், இது குறித்து நடத்திய ஆய்வில், ‘‘கரும்பு வெட்டும் பெண்கள், மாதவிடாய் காலம் தங்களது வறுமை ஒழிப்பிற்கும், வேலைக்கும் இடையூறாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து கருப்பையை எடுத்து விடுகிறார்கள்.

ஆனால், இதன் விளைவுகளை அவர்கள் அறிவதில்லை. இதனால் ஹார்மோனல் இம்பேலன்ஸ், மனரீதியான பிரச்சினைகள், உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய்… போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் 25 வயது இளம் பெண்களும் இந்த அறுவை சிகிச்சைக்கு ஆளாகியிருப்பது” என்றார்.

பந்து உகேல், சத்யபாமா ஆகியோரது கணவர்களும் கரும்பு வெட்டும் தொழிலை செய்து வருகிறார்கள், “ஒரு டன் கரும்பு வெட்டினால் எங்களுக்கு ரூ.250 கிடைக்கும். ஒரு நாளில் 3-4 டன்னும், அந்த பருவம் முழுவதும் சேர்த்தால் 300 டன் கரும்பு வெட்டு கிறோம். அப்போது சம்பாதிப்பதுதான் எங்களுக்கான ஆண்டு வருமானம். அங்கு வேலை முடிந்த பிறகு எங்களுக்கு அடுத்த வேலை கேள்விக்குறி?” என்கிறார் உகேல்.

“கரும்பு வெட்டும் பெண்களின் வாழ்வு நரக வாழ்க்கையாக இருப்பதோடு, பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகிறாள். இவர்கள் கரும்பு தோட்டம் மற்றும் சர்க்கரை ஆலைக்கு அருகிலேயே ஒரு டெண்டில் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்களுக்குக் கழிவறை வசதியும் கிடையாது” என்று கூறுகிறார் அங்கு வேலைப் பார்க்கும் பெண்மணி ஒருவர்.

பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் முதல் மெனோபாஸ் வரை பல்வேறு உடலியல் மாற்றங்கள் நடைபெற கர்ப்பப்பை மிகவும் அவசியம் என்பது மருத்துவ உண்மை. அடிமைத் தொழிலிலேயே இதுதான் மிக மோசமான வடிவம். அதன் முழு வீச்சையும் பெண்கள்தான்
அனுபவிக்கிறார்கள்.

தமிழகத்திலும் கரும்பு வெட்ட பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கொத்தடிமைகளாகத் தான் இருக்கிறார்களே தவிர இங்குள்ள பெண்களில் யாருக்கும் கர்ப்பப்பை நீக்கப்படவில்லை. சமீபத்தில் தஞ்சாவூரில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலைப்பார்த்த 23 பேரை மீட்டெடுத்தனர். இவர்களைப் போன்று மீட்கப்படாதவர்கள்  பலர் உள்ளனர்.இவர்களை பார்க்கும் போது நம்மில் பலர் சுகமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அதையும் நாம் சரியாகத்தான் வாழ்கிறோமா…?

அன்னம் அரசு

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!