×

அரசு நிலம் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பு தமிழக அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு: முதல்வர், துணை முதல்வர், வருவாய்துறை அமைச்சர் மீது திமுக புகார்

சென்னை: அரசின் விதிமுறைகளுக்கு முரணாக அவசர அவசரமாக அரசு நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்துக்கு தாரை வார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு ₹500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு உடந்தையாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது கூட்டுச் சதி, ஊழல், லஞ்சம் பெற்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அமைந்தகரை தாலுகா பூந்தமல்லி சாலை, டி.எஸ்.எண் 9-19, பிளாக் எண்-35, கோயம்பேட்டில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு மிகமிக குறைந்த விலையில் அதாவது ஒரு சதுர அடி ரூ.12,500 என்ற விலையில் விற்பனை செய்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 8ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் வந்துவிடும் என்பதால் அவசர அவசரமாக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு சிஎம்ஏடிஏவிடம் அவசரமாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலில் அரசு நிலங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்போது அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தனிப்பட்ட நபருக்கு உதவும் வகையில், லாபம் அடையும் நோக்கில் இருந்துவிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தலுக்கு மாறாக அரசு நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தராமல் தனிப்பட்ட ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரின் கூட்டுச் சதி நிரூபணமாகியுள்ளது.

 அரசு நிலத்தை உள்ளாட்சி அமைப்புகள், துணை மின் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், மருத்துவமனைகள், சாலைகள், மார்க்கெட்டுகள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், தனி நபர் ஆதாயத்திற்காக அரசு நிலம் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதற்கான முகாந்திரம் உள்ளது உறுதியாகிறது. பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் ரூ.1,557 கோடி மதிப்பீட்டில் வர்த்தக மையம் மற்றும்  குடியிருப்புகளை கட்டி வருகிறது. இந்த கட்டுமானங்கள் நடைமுறைக்கு வந்தால் 7,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால், குடியிருப்புகளை கட்டுவதால் 7500 பேருக்கு எப்படி வேலை தரமுடியும்.

இந்த இடத்தில் 2,078 குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாகவும் 2,557 சதுர அடியில் 4 பெட்ரூம் பிளாட்டுகள் ஒரு சதுர அடி ரூ.11 ஆயிரம் விலையில் விற்பனைக்கு உள்ளாகவும் அந்த நிறுவனம் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது. அரசு நிலத்தில் கட்டுமானங்களை எழுப்பி அதை ரியல் எஸ்டேட் வணிகத்துக்கு கொண்டு சென்றிருப்பது சட்டத்திற்கு விரோதமானது. இந்த மோசடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு முக்கிய பங்கு உள்ளது. விஜயந்த் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் முகவரியில் பதிவு செய்யப்பட்ட காரில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார். விஜயந்த் டெவலப்பர்ஸ் மற்றும் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கும் சம்மந்தம் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.25 ஆயிரம். ஆனால், ஒரு சதுர அடி ரூ.12,500 விலையில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் உள்ள இடங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தனியார் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் அரசு நிலத்தை கொடுத்து ரியல் எஸ்டேட் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு நிலத்தை விதிமுறைகளுக்கு முரணாக தனிப்பட்ட ஆதாயத்தை பெறுவதற்காக அவசர அவசரமாக சிஎம்டிஏ அனுமதி பெற்றுள்ளனர்.

சிஎம்டிஏவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை வைத்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து அரசு நிலத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் விற்பனை செய்துள்ளனர். இதில் பெரிய அளவில் கூட்டுச்சதி, மோசடி நடந்துள்ளது. எனவே, இதற்கு காரணமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வும், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. சிஎம்டிஏவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி, வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை வைத்திருக்கும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து அரசு நிலத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் விற்பனை செய்துள்ளனர்.

* பணம் கொடுத்து வாங்கியவர்கள் கதி என்ன?
பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் தற்போது கட்டிவரும் பிளாட்டுகளை விற்பனை செய்ய விளம்பரம் செய்து வருகிறது. சதுர அடி 11 ஆயிரம் ரூபாய் விலையில் இந்த பிளாட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு பிளாட் 400 சதுர அடி என்றால், அதன் மதிப்பு சுமார் 44 லட்சமாக இருக்கும். ஆனால் அதன் மீது 10 மாடிகள் கட்டப்பட்டால், பல நூறு கோடி சர்வசாதாரணமாக கிடைக்கும். அரசிடம் சதுர அடி 12,500க்கு வாங்கி 11,000 ஆயிரத்துக்கு குறைவாக விற்பதாக நினைக்க தோன்றும். ஆனால் பல அடுக்கு மாடி கட்டும்போது, அந்நிறுவனத்தின் லாபம் அதிகமாகவே இருக்கும். இது தெரியாத பலர் ஏற்கனவே பிளாட்டுகளை வாங்க புக்கிங் செய்து பணத்தையும் கட்டியுள்ளனர். சிலர் வங்கியில் கடன் வாங்கி பணத்தை கட்டியுள்ளனர். தற்போது, இந்த நில ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடும். இது குறித்து வழக்குப்பதிவும் செய்யப்படும். இதனால் கட்டிடத்தை அரசு பறிமுதல் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், பாஷ்யம் நிறுவனத்தில் பணம் கட்டி வீடு வாங்கியவர்கள் நிலை பரிதாபத்துக்குறியதாக மாறிவிடும். அவர்கள் நடுத்தெருவுக்கு வரும்நிலை ஏற்படும். இதனால் அவர்களும் பாஷ்யம் நிறுவனம் மீது புகார் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இந்த நிறுவனம் மேலும் பல சிக்கல்களை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்த பாஷ்யம் நிறுவனத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்கள் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்தும் திமுக அரசு விசாரணை மேற்கொண்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Deputy Principal ,Minister of Revenue , DMK loses over Rs 500 crore to Tamil Nadu government
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...