×

இந்திய இடைத்தரகு நிறுவனத்துக்கு ரூ.8.6 கோடி கமிஷன் ரபேல் விமான கொள்முதலில் ஊழல்: அம்பலப்படுத்தியது பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை

புதுடெல்லி: பிரதமர் மோடி நேரடியாக சம்மந்தப்பட்ட ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய இடைத்தரகராக செயல்பட்ட நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கமிஷன் தரப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை அம்பலப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் வகையில் புதிய அதிநவீன போர் விமானமான பிரான்சின் ரபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 விமானங்கள் வாங்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதன் பின், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி பிரதமரானதும், அவர் கடந்த 2016ல் பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்தார். அப்போது, ரபேல் விமானம் வாங்குவதில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடி என்ற விலையில் 36 விமானங்கள் வாங்க ₹59,000 கோடிக்கு பிரதமர் மோடி ஒப்பந்தத்தை முடிவு செய்தார். இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது. விமானத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பெருமளவில் எதிரொலித்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கு முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக அமைந்தன. இந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக புதிய குற்றச்சாட்டு ஆதாரத்துடன் வெளியாகி உள்ளது. ரபேல் ஒப்பந்தம் கடந்த 2016ல் உறுதியானதும் 2018 அக்டோபரில் டசால்ட் நிறுவனம் இந்தியாவில் துணை ஒப்பந்த நிறுவனமான டெப்சிஸ் சொலிசஷன் என்ற நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கமிஷனாக கொடுத்துள்ளது.
இந்த விவகாரத்தை பிரான்ஸ் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் ஆன்லைன் பத்திரிகைய மீடியா பார்டு தெரிவித்துள்ளது. பிரான்சின் பெரிய நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை அந்நாட்டின் ஊழல் தடுப்பு துறை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, கடந்த 2017 மற்றும் 2018ல் டசால்ட் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை ஆய்வு செய்த போதுதான், ரபேல் ஒப்பந்தம் முடிவானதும் டசால்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகு நிறுவனமாக செயல்பட்ட டெப்சிஸ் நிறுவனத்திற்கு ரூ.8.6 கோடி கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டசால்ட்  நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘‘ரபேல் விமானத்தின் மாதிரிகளை செய்து தருவதற்காக ரூ.8.6 கோடி டெப்சிஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டது’’ என கூறியது. ஆனால், அதுபோன்ற எந்த மாதிரி புகைப்படங்களையும் டசால்ட் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. எனவே இது இடைத்தரகு நிறுவனத்திற்கு ‘அன்பளிப்பாக’ தரப்பட்ட பணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

* பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்
காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘இந்த பணம், ‘வாடிக்கையாளருக்கு தந்த பரிசு’ என டசால்ட் நிறுவனத்தின் செலவினத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதில் உண்மையிலேயே யாருக்கு எவ்வளவு கமிஷன் தரப்பட்டுள்ளது, இந்திய அரசு யாருக்காவது கமிஷன் தந்துள்ளதா என்பது குறித்து வெளிப்படையான நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்’’ என்றார்.

* ஆதாரமற்றது
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. உச்ச நீதிமன்றம், மத்திய கணக்கு தணிக்கை ஆய்வில் எந்த தவறும் நடக்கவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Raphael ,French Anti-Corruption Department , Rs 8.6 crore commission to Indian brokerage firm in Raphael plane purchase scandal: French Anti-Corruption Department
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த வீரர்!