×

800 கிராம் கடத்தல் தங்கத்தை மறைத்து வழக்குப்பதிவு இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசாரிடம் துணை கமிஷனர் தீவிர விசாரணை: ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு 64 மதுபாட்டில்கள் மட்டும் இருந்ததாக வழக்கு பதிந்தது அம்பலம்

சென்னை: 800 கிராம் கடத்தல் தங்கத்தை மறைத்து வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரிடம் துணை கமிஷனர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். துபாயில் இருந்து விமானத்தில் வந்த 5 பேர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடந்த 1ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேற்கண்ட லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் துபாயில் இருந்து வந்த நாமக்கல் மாவட்டம் பாசிப்பட்டினத்தை சேர்ந்த குல்குர்னிபாஷா (35), மர்சூத்அலி (38), சேக் அப்துல்லா (27), சைதாப்பேட்டை சாரதி நகரை சேர்ந்த புர்க்கானுதீன் (41), அப்துல் ஹக் (38) ஆகியோர் தங்கி இருந்தது தெரியவந்தது.

அவர்கள் வைத்திருந்த உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, 800 கிராம் கடத்தல் தங்கம், 10 விலை உயர்ந்த ஐ போன்கள், 65 வெளிநாட்டு மதுபானங்கள், 34 வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் ெசய்தனர். விசாரணையில், அவர்கள் 5 பேரும் ‘குருவிகள்’ என்பதும், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கடத்தல் நபர்களிடம், திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு உளவுத்துறை காவலர் ஆகியோர் பேரம் பேசியுள்ளனர். இதில் கடத்தல் தங்கம், விலை உயர்ந்த செல்போன்கள், சிகரெட் பண்டல்களை விடுக்க ரூ.5 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு சம்மதம் தெரிவித்த இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரும் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு 800 கிராம் தங்கம், 10 விலை உயர்ந்த செல்போன்கள், 34 வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, 65 வெளிநாட்டு மதுபானங்கள் மட்டும் லாட்ஜில் பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கவனத்துக்கு வந்தது. உடனே சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவனுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் பகலவன் லாட்ஜில் சோதனை நடத்த சென்ற இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு உளவுத்துறை காவலர் என 4 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு தங்கத்தை விடுவித்தது உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை அறிக்கையை துணை கமிஷனர் பகலவன் ஓரிரு நாளில் போலீஸ் கமிஷனரிடம் அளிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையின்படி கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Deputy Commissioner , Deputy Commissioner intensifies probe into 4 policemen, including inspector, for concealing 800 grams of smuggled gold
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...