அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு திடீர் போராட்டம்: தலைமை செயலகம் எதிரே பரபரப்பு

சென்னை: அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அய்யாக்கண்ணு திடீரென தலைமை செயலகம் எதிரே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் ஏமாற்றி விவசாயிகள் சட்டை, வேட்டி, ஜாக்கெட், சேலையை பிடுங்கி கொண்டார்கள். இதனால் சட்டையில்லாமல் அரை நிர்வாணமாக அரவக்குறிச்சியில் வேட்பாளராக மனு தாக்கல் செய்ய வந்தோம்.

காந்தியே விவசாயிகளை பார்த்த பிறகு சட்டையில்லாமல் இருந்தார். ஆனால் விவசாயிகள் சட்டையில்லாமல் சட்டமன்ற உறுப்பினராக மனு தாக்கல் செய்ய கடந்த மாதம் 18ம் தேி அரவக்குறிச்சிக்கு சென்றபோது, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக விவசாயிகளை தடுத்து திருப்பி அனுப்பி விட்டவர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை கொன்று விட்டு நஞ்சான உணவை இளைஞர்களுக்கு கொடுத்து வருங்கால சந்ததியை அழித்து விடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தோம்.

இது சம்பந்தமாக கடந்த மாதம் 23ம் தேதி டெல்லி, சென்னையில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினோம். தற்போதும் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். அரவக்குறிச்சி தேர்தலை தள்ளி வைத்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து அய்யாக்கண்ணு மற்றும் அவருடன் வந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

Related Stories:

>