தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க தலைமை செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க தலைமை செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 11 ஆயிரம் பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 46,203 வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி வேப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள வெப்கேமராவை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டவர்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். இதற்கான கட்டுப்பாட்டு அறை சென்னை, தலைமை செயலகத்தில் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் நேற்று மதியம் முதல் அனைத்து வாக்குச்சாவடிகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த பணி இன்று இரவு தேர்தல் முடியும் வரை தொடரும்.

தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாலை பார்வையிட்டார். இதேபோன்று, பொதுமக்களிடம் இருந்து வரும் தேர்தல் தொடர்பான வாக்காளர் சேவைக்கான 1950 என்ற இலவச தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்கவும், அனைத்து தேர்தல் வாகனங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியினை மேற்கொள்ளும் (ஜிபிஎஸ்) அறையையும் சத்யபிரதா சாகு பார்வையிட்டார். அப்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், அஜய் யாதவ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.

Related Stories:

>