×

கொளத்தூர் தொகுதி தேர்தலை நிறுத்த அதிமுகவினர் உத்தரவின் பேரில் திமுகவினர் வீடுகளில் சோதனை

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த அதிமுகவினர் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் திமுக பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதாக திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் கடைசி கட்ட முயற்சியாக தேர்தலை நிறுத்தும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நேற்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கொளத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளார்.

அவரை தொடர்ந்து, அமைச்சர் ஜெயக்குமார் கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இவையெல்லாம் நேற்று காலை நடந்து முடிந்த நிலையில் நேற்று மதியம் அதிமுகவினர் உத்தரவின்பேரில் போலீசாரின் துணையோடு கொளத்தூர் தொகுதியில் உள்ள திமுகவினர் வீடுகளில் சோதனை என்ற பெயரில் அத்துமீறலில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பெரம்பூர் பேப்பர் மில்ஸ்  சாலையில் உள்ள திமுக பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி வீடு மற்றும் ஜி.கே.எம் காலனி 24வது தெருவில் உள்ள மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார் வீடு மற்றும் நீலம் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மாணவரணி துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வீடு என மூன்று பேரின் வீடுகளிலும் நேற்று போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சுமார் ஒரு மணிநேரம் அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் எந்த பணமும் ஆவணங்களும் சிக்காததால் விரத்தி அடைந்த போலீசார் திரும்பி சென்றனர். தகவல் அறிந்ததும் திமுகவின் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் எதன் அடிப்படையில் சோதனை நடத்தினர் என கேட்டார். ஆனால், அவர்கள் பதிலளிக்காமல் சென்றுவிட்டனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரின் வெற்றி வாய்ப்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. எப்படியாவது ஏதாவது ஆவணங்கள் சிக்காதா அதை வைத்து தேர்தலை இந்த தொகுதியில் நிறுத்த முடியாதா என்ற ஒரே நோக்கத்தில் போலீசாரின் உதவியோடு அதிமுகவினர் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றார்.

* வாட்ஸ்அப் குழுவில் வெடிகுண்டு புரளி
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் விஜயகுமார், கொளத்தூர் தொகுதியில் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை துவங்கி அதில் திமுக பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி, மகேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் அதை பயன்படுத்தப் போவதாகவும் நேற்று பதிவிட்டார். அவரது பதிவை பார்த்த பின்புதான் போலீசார் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விஜயகுமார் என்பவர் ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்தவர். இவர், தற்போது அதிமுக சார்பில், போட்டியிடும் ஆதிராஜாராமுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் குரூப்பில் இதுபோன்ற பதிவு வெளியிட்ட ஆதாரம் இருந்தும்  போலீசார் இதுவரை விஜயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Kolathur , AIADMK raids homes in Kolathur
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...