×

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்தில் 475 தொகுதியில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கொல்கத்தா: தமிழகம் உட்பட 5 மாநிலத்தில் நாளை 475 சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 60 தொகுதிகளுக்குத் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கு நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் 86 தொகுதிகளுக்கு முதல் 2 கட்டங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு 7 மணியுடன் மேற்குவங்கம், அசாம் சட்டப் பேரவைகளின் 3ம் கட்டத்  தேர்தலுக்கான பிரசாரமும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி பேரவைத்  தேர்தலுக்கான பிரசாரமும் நிறைவடைந்தது. தமிழகம் (234), கேரளா (140), புதுச்சேரி (30), மேற்குவங்கம் (31), அசாம் (40) ஆகிய 5 மாநிலங்களிலும் 475 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைெபறவுள்ளது. அதனால், நாளை நடக்கும் வாக்குப்பதிவானது தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் முடிவுக்கு வருகிறது.

அதேநேரத்தில் மேற்குவங்கத்தில் நாளையுடன் 3 கட்ட வாக்குப்பதிவு மட்டும் முடிவுக்கு வருவதால், மீதமுள்ள 5 கட்டத்திற்கும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளன. 5 மாநிலங்களிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக தேர்தல் ஆணையம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

நாளை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். அங்குள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ என்று அழைக்கப்படும் உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்படும். மேற்குவங்க தேர்தல் அனைத்தும் முடிந்து வரும் மே 2ம் தேதி மேற்கண்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Tags : Tamil Nadu ,Kerala ,Vuvachcheri ,Assam ,West , Tamil Nadu, Kerala, Pondicherry, Assam and West Bengal will go to the polls tomorrow in 475 constituencies.
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...